தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. பெண்கள் தலையில் சூடிக்கொள்ளவதற்காகவும், வீடுகளில் பூஜைக்காகவும் அதிக அளவில் பூக்கள் வாங்குகிறார்கள்.
தஞ்சை பூக்காரதெரு, தொல்காப்பியர் சதுக்கம் பகுதிகளில் பூமார்க்கெட்அமைந்துள்ளது. இங்கு திண்டுக்கல், ஊட்டி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பூக்கள் கொண்டு வரப்படுகிறது. அனைத்து இடங்களிலும் பூக்களின் தேவை இன்று அதிகமாக உள்ளது. அத்துடன் நாளை முகூர்த்த தினமும் சேர்ந்து வருவதால் பூக்கள் விலை இன்று மிக கடுமையாக உயர்ந்து காணப்பட்டது.
தஞ்சையில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2ஆயிரம் வரை விற்பனையானது. இதுபோல முல்லையும் 2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கனகாம்பரம் கிலோ ரூ.1000, ரோஜா ரூ.300, செவ்வந்தி ரூ.200 என விற்பனையானது. கடந்த 2 தினங்களுக்கு முன் தஞ்சையில் மல்லிகை அதிகபட்சமாக ரூ.600க்கு விற்று வந்த நிலையில் இன்று 2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.