Skip to content
Home » ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

ஜல்லிக்கட்டு போட்டி…. விதிமுறைகளை அறிவித்தார் திருச்சி கலெக்டர்

  • by Authour

பொங்கல் திருவிழாவையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படும். திருச்சி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும்.

போட்டி நடத்துவது குறித்த விதிமுறைகளை திருச்சி மாவட்ட கலெக்டர்  பிரதீப் குமார் அறிவித்துள்ளார். அதன் விவரம் வருமாறு:

திருச்சி மாவட்டத்தில்  2023ம் ஆண்டிற்கான ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நேர அவசரம் தவிர்க்கும் பொருட்டும், அரசிதழ்களில் அறிவிப்புகள் வெளியிடும் பொருட்டும்  இந்த  ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கான விண்ணப்பங்களை போட்டி நடத்தப்படும் 15 தினங்களுக்கு முன்னதாக மாவட்ட நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு/ வடமாடு/ மஞ்சு விரட்டு / எருது விடும் விழா போட்டிகளை நடத்தும் விழா குழுவினர் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை அரசாணை எண்: 7 ல், 21.07.2017-ல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்றி போட்டியினை நடத்துவதற்கு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அரசிடம் முன் அனுமதி பெற்று மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும். அரசாணை வெளியிடப்பட்டு கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற கிராமங்களில் மட்டுமே தற்போது ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட வேண்டும். அரசாணை வெளியிடப்படாமல் கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு அனுமதி வேண்டுமெனில், ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதற்கான புகைப்படங்கள், நாளிதழ்களில் வரப்பெற்ற செய்தி, கல்வெட்டு மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகல் போன்ற ஆதாரங்களுடன் விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்குபெறும் காளையுடன் அதன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஒருவர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும். ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளும் காளைகள் போட்டிகளில் பங்கேற்கும் முன்பு அதன் உரிமையாளர் கண்டிப்பாக காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அதற்கான சான்றினை சமர்ப்பிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்று முடிந்த பிறகு அதன் உரிமையாளர் காளையினை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் காளை பங்கேற்று முடிந்த பிறகு அதன் உரிமையாளர்கள் கண்டிப்பாக காளைகளை மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற்ற காளைகளுக்கு போதிய அளவு ஓய்வளித்து, காளைகளை உடனடியாக வீடுகளுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்தும் விழாக்குழுவினர் மற்றும் போட்டியில் பங்குபெற காளைகளை அழைத்து வரும் காளையின் உரிமையாளர் மற்றும் போட்டியில் பங்குபெறும்

அனைத்து வீரர்களும் கண்டிப்பாக கோவிட்-19 தடுப்பூசி இரண்டு தவணைகளும் செலுத்தியிருக்க வேண்டும். மேலும், விழாவில் பங்கு பெறுவோர் கோவிட் -19 (RT-PCR Test) பரிசோதனையினை விழா நடைபெறும் இரண்டு தினங்களுக்கு முன்பு மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றினை (Negative Report) மருத்துவக் குழுவினரிடம் வழங்க வேண்டும்.

அரசிடமிருந்து முன் அனுமதி பெறாமல் ஜல்லிக்கட்டு போட்டியினை நடத்துவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேற்குறித்த அறிவுரைகளை பின்பற்றி உறுதிமொழிகளுடன் போட்டி நடத்த உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அளித்திட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *