தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. மதுரை அலங்காநல்லூர், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக புகழ்பெற்றவை.
இதற்கிடையே கோர்ட்டு உத்தரவால் ஜல்லிக்கட்டுக்கு இடையில் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் தன்னெழுச்சியாக போராடினர். இதனையடுத்து தமிழ்நாடு அரசு அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தது. இதன் காரணமாக தற்போது தமிழர் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யவேண்டும், விலங்குகளுக்கும் அடிப்படை உரிமை உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய வேண்டும் என விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.
இதைக்கேட்ட நீதிபதிகள், கொசு கடித்தால் அதை அடித்து கொல்கிறோம். இது விலங்குகள் வதையில் வருகிறதா என மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினர். இந்த மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்த போட்டி கால்நடைகளை துன்புறுத்துவதில்லை. இது தமிழர்களின் பாரம்பரிய கலை என்று தமிழக அரசு வாதிட்டது.
இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது.
அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட அரசியல் சாசன அமர்வு, மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த ஆண்டு டிசம்பர் 12-ந்தேதி ஒத்தி வைத்தது. இந்த நிலையில் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று (வியாழக்கிழமை) இந்த மனுக்கள் மீதான தீர்ப்பை அளித்தது. நீதிபதிகள் காலை 11.15 மணிக்கு தீர்ப்பினை வாசிக்கத்தொடங்கினர்.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு உரிமை உள்ளது. மக்கள் பிரதிநிதிகளால் இயற்றப்பட்ட சட்டத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. ஜல்லிக்கட்டு போட்டி பண்பாட்டின் ஒரு பகுதி என அறிவித்த நிலையில் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது.தமிழக அரசு இயற்றிய அவசர சட்டம் செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 5 நீதிபதிகளும் ஒரே கருத்தை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதன்படி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பை கேட்ட தமிழக மக்கள், குறிப்பாக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.