பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்படும். மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 ஊர்களிலும் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலகபுகழ் பெற்றது. பொங்கல் பண்டிகை அன்று அவனியாபுரம், அடுத்த நாள் பாலமேடு, காணும் பொங்கல் அன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
அதன்படி அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு துவங்கியது. மதுரை மட்டுமின்றி சிவகங்கை, புதுகை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுமார் 1,000 காளைகள் அழைத்து வரப்பட்டிருந்தன. 320 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். ஒவ்வொரு சுற்றுக்கும் 50 வீரர்கள் களமிறக்கப்பட்டனர்.
அமைச்சர்கள் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். வாடிவாசலில் இருந்து ஒவ்வொரு காளைகளாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் தங்க காசு, கட்டில், கிரைண்டர், மின் விசிறி, நாற்காலி உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த மாடு பிடி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் 2 பைக்குகள் வழங்கப்படுகின்றன. முன்னதாக உடற்தகுதி தேர்வுக்கு மது போதையில் வந்த 5 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் ஜல்லிக்கட்டை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.