தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி தைப்பொங்கல் முதல் துவங்கும். அன்றைய தினம் அவனியாபுரம், அடுத்த நாள் பாலமேடு, மாட்டுப்பொங்கல் அன்று புகழ்பெற்ற அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும். இதற்கான ஏற்பாடுகள் தற்போது முழு வீச்சில் நடந்து வருகிறது. இதேபோல் திருச்சி, தஞ்சை, புதுகை, கரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடக்கும்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியின் போது காளைகளுடன் 2 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இருவரும் கோவிட் நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 300 பார்வையாளர்கள் அல்லது மொத்த இருக்கையில் பாதி அளவு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் உள்ளிட்ட விவரங்களை அரசு தெரிவித்துள்ளது.