தமிழர்களின் பாரம்பாரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் கலாசாரம் சார்ந்தது. எனவே போட்டியை தடை செய்யக்கூடாது என தமிழக அரசு சார்பில் வாதிடப்பட்டது. இந்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய முடியாது என 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் ஒருமித்த தீர்ப்பினை வழங்கியது.
இந்த வெற்றியினை பெற்றுத்தந்த முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழக மக்களும், விவசாயிகளும், ஜல்லிக்கட்டு பேரவையினரும் வாழ்த்தும், நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர். இந்த நிலையில் வரும் 5ம் தேதி மாலை முதல்வர் ஸ்டாலினுக்கு ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் முதல்வர் ஸ்டாலினுக்கு புதுக்கோட்டையில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான ஆலோசனைக்கூட்டம் புதுக்கோட்டையில் கடந்த 28ம் தேதி நடந்தது. இதில் அமைச்சர்கள் கே. என். நேரு, அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி, மெய்யநாதன், மதுரை மூர்த்தி, பெரியகருப்பன், அப்துல்லா எம்.பி. மற்றும் ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகரன் சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் , வடக்கு மாவட்ட அவைத்தலைவர் அரு.வீரமணி, முன்னாள் எம்.எல்.ஏ.பெரியண்ணன்அரசு,நகரசெயலாளர் ஆ.செந்தில் ஆகியோர் பங்கேற்று
பாராட்டு விழா குறித்து பேசினர். வரும் 5ம் தேதி மாலை 4 மணிக்கு முதல்வருக்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக 5ம் தேதி முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை வருகிறார். அரசு மருத்துவ கல்லூரி அருகே உள்ள வடுகப்பட்டி, பாலன் நகர் என்ற இடத்தில் விழா நடைபெறுகிறது.இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி நடக்கிறது.
விழா முடிந்ததும் முதல்வர் ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார்.