Skip to content
Home » அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

அரியலூரில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் விழிப்புணர்வு கூட்டம்

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி தலைமையில்  நடைபெற்றது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு ஜனவரி மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெறுகிறது. தமிழ்நாடு விலங்குகள் வதைதடுப்பு (ஜல்லிக்கட்டு நடத்துதல்) விதிகள், 2017ன் பிரிவு 3(2)இன் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ள நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பது கண்டிப்பாக அமல்படுத்தப்பட வேண்டிய ஒன்று. அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக் இயலாது.

ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்காக புதிதாக உருவாக்கப்பட்ட www.jallikattu.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் செயலாக்கப்பட வேண்டும் என்பதன் காரணமாக இன்றையதினம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குவது குறித்து, அரியலூர், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அடங்கிய குழு மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுடன் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஜல்லிக்கட்டு விழாவிற்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரியலூர், மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களுக்கு விரிவாக தெரிவித்தார். ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்களின் சந்தேகங்கள் மற்றும் வினாக்களுக்கு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் உரிய விளக்கம் அளிக்கப்பட்டது.

இக்கூட்டத்தில், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் பாரிவேந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், வருவாய் கோட்டாட்சியர்கள் மணிகண்டன் (அரியலூர்), ஷீஜா (உடையார்பாளையம்), அரசு அலுவலர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.