அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சிங்கராயபுரம் கிராமத்தில், புனித அந்தோணியார் பொங்கலை முன்னிட்டு, அன்னை ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. நிகழ்ச்சியை உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, ஜெயங்கொண்டம் எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். 700 மாடுகளும், 400 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டு காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னரே, ஜல்லிக்கட்டு வளாகத்தில் அனுமதிக்கப்பட்டது. மாடுபிடி
வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தபிறகு ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டனர்.
போட்டி தொடங்குவதற்கு முன்பு அனைவரும் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். சீரி பாய்ந்த காளைகளை போட்டி போட்டுக் கொண்டு காளையர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். பல காளைகள், காளையர்களுக்கு கட்டுப்படாமல் அவர்களின் மிரட்டி சுற்றி பாய்ந்து தாங்களும் வீர மிக்கவர்கள் என்பதை பறைசாற்றின.
பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் அன்னை ஜல்லிக்கட்டு கமிட்டி சார்பில் கட்டில், பீரோ , சைக்கிள், சேர், டேபிள், குவளை, குடம், தங்கநாணயம், டிவி, பண முடிச்சுகள் உள்ளிட்டவை பரிசுகளாக வழங்கப்பட்டது.
ஜல்லிக்கட்டு போட்டியில் புதுக்கோட்டை, சேலம், தர்மபுரி, ஆத்தூர், பெரம்பலூர், அரியலூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன. பாதுகாப்பு பணிக்காக ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு சீராளன் தலைமையிலான ஜெயங்கொண்டம் மற்றும் அரியலூர் காவல்துறையினர் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் தீயணைப்பு துறையினர், மருத்துவ குழுவினர் உள்ளிட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர். ஜல்லிக்கட்டு போட்டியினை காண ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி, உடையார்பாளையம் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் இருந்தும் கிராமப் பகுதிகளில் இருந்தும் வெளி மாவட்டங்களில் இருந்தும் வேடிக்கை பார்க்க 5000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாடிகளிலும், மரங்களிலும் ஏறி அமர்ந்து கண்டு ரசித்தனர்.