புலியை முறத்தால் அடித்து விரட்டினாள் வீரத்தமிழச்சி என்று சங்க இலக்கியம் கூறுகிறது. இன்றைக்கு சிலரால் இதை ஏற்க முடியாது தான். இதை மறுத்து பேசுவார்கள். ஒரு பெண்ணால் புலியை அடித்து விரட்ட முடியுமா? என்று சிலர் காலம் காலமாக கேள்வி கேட்டே காலத்தை ஓட்டிக்கொண்டு இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களுக்கு விடை தந்தவர் வால்பாறை எஸ்டேட் தொழிலாளியான முத்துமாரி. சில வருடங்களுக்கு முன் இவர் வீட்டு முன் வந்த சிறுத்தை அவரது மகளை கவ்வியது. ஆவேசமடைந்த முத்துமாரி அருகில் கிடந்த விறகு கட்டையால் சிறுத்தையை தாக்கினார். கவ்விய மகளை போட்டு விட்டு தப்பித்தோம், பிழைத்தோம் என ஓடி உயிர்பிழைத்தது சிறுத்தை.
அந்த முத்துமாரியின் வீரத்தை பாராட்டி தமிழக அரசு அவருக்கு கல்பனா சாவ்லா வீரதீர விருது வழங்கி போற்றியது. தமிழர்களின் வீரம், குறிப்பாக பெண்களின் வீரம் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது என்பதற்கு இப்படி எத்தனையோ உதாரணங்களை சொல்லலாம்.
அந்த வகையில் தான் நேற்று மதுரை பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டில் ஒரு காளை மைதானத்தில் கெத்து காட்டி சினங்கொண்டு சீறிக்கொண்டு இருந்தது. மதம்கொண்ட மாவீரர்களின் கால்கள் தானாகவே பின்னோக்கி நடையைகட்டியது. இப்படியாக குறிப்பிட்ட நேரம் வரை மைதானத்தை தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்தது அந்த காளை.
நேரம் முடிந்தும் அந்த காளை இடத்தை காலி செய்யவில்லை. அதை விரட்ட அருகில் செல்ல முடியாமல் காளையர்கள் ஒதுங்கி நின்றனர். இதனால் மற்ற காளைகளை களத்தில் இறக்க முடியவில்லை. எனவே காளையின் உரிமையாளர் வந்து காளையை அழைத்து செல்லும்படி அறிவிப்பு செய்யப்பட்டது.
அப்போது ஒட்டு மொத்த மைதானமே அந்த காளையையும், காளையின் உரிமையாளரையும் பார்க்கத் தொடங்கினர். காளையின் உரிமையாளரும் ஒரு கட்டிளங் காளையாக வருவார் என அனைவரது கண்களும் உற்று நோக்க…… மைதானத்திற்குள் வந்தார் ஒரு வீரப்பெண்மணி.
அவருக்கு சுமார் 40 வயது இருக்கும். ஒரு கயிற்றைக் கொண்டு வந்தார். பயந்து, ஒளிந்து, பின்பக்கமாக போய் காளை மீது கயிற்றை வீசவில்லை. நேருக்கு நேர் கொம்பு அருகில் சென்று காளையின் மீது கயிற்றை போட்டு தன்னோடு உற்ற தோழன் போல அழைத்துச் சென்றார்.
பாலமேட்டு ஜல்லிக்கட்டில் பல காளைகளை அடக்கி பலர் பரிசுகள் வென்றிருக்கலாம். ஆனால் அடங்க மறுத்த ஒரு காளையை, யாரும் நெருங்கவே மறுத்த ஒரு காளையை ஒரு வீர தமிழச்சி அருகில் சென்று அழைத்து சென்ற காட்சி தான் பாலமேடு ஜல்லிக்கட்டின் முத்தாய்ப்பு. அவரின் இந்த வீரத்திற்காக ஒரு சிறப்பு விருது அளித்து கவுரவித்து இருக்கலாம். புலியை விரட்டிய வீரப்பெண்மணிகள் இன்றும் தமிழ் நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பதற்கு இதுவும் ஒரு சான்று. வீரம் விளைகின்ற மண்….. அதில் ஈரமும் இருக்கும்…… வீரமும் இருக்கும்.