பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது தொன்றுதொட்டு இருந்து வரும் பழக்கம். அதிலும், குறிப்பாக தைப்பொங்கல் அன்று மதுரை அவனியாபுரத்தில் தொடங்கும் ஜல்லிக்கட்டு அப்படியே ஒவ்வொரு ஊராகத் தொடர்ந்து தென் மாவட்டங்களில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக நடக்கும்.
ஜல்லிக்கட்டு நடைபெறும் ஊர்களில் மிகப்பெரும் திருவிழாவாகவே இந்த போட்டி நடத்தப்படுகிறது. முன்பு அண்டா, குண்டா என்று சிறிய பரிசுகள் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இரு சக்கர வாகனங்கள், எல்இடி டிவி, பிரிட்ஜ், கார் என பிரம்மாண்டமான பரிசுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அவற்றைப் பெறுவதற்காகவே மாடுபிடி வீரர்களும், காளைகளும் களத்தில் மிகத் தீவிரமாக மோதுகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் இதற்காக காளைகளைத் தயார் செய்யும் பணியில் அவற்றின் உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக காளைகளுக்கு சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் காளைகளுக்கு ஆரோக்கியமான உணவுகளை உரிமையாளர்கள் வழங்கி வருகின்றனர்.
2024-ம் ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தில் நடைபெறுகிறது. ஜனவரி 6-ம் தேதி நடைபெற உள்ள இந்த போட்டிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போட்டியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் தொடங்கி வைப்பார்கள் எனத் தெரிகிறது. முதல் போட்டியில் மோதுவதற்கு காளைகளும், காளையர்களும் ஆர்வமாக தயாராகி வருகின்றனர்.