இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம் தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி 9 மணிக்கு வெளியானது. இதனை ஆட்டம் பாட்டத்துடன், மேள, தாளங்களுடன் பட்டாசு வெடித்து ரஜினி ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 900 இடங்களில் இன்று ஜெயிலர் திரையிடப்பட்டது. திருச்சியில் பெரும்பாலான திரையரங்குகளில் ஜெயிலர் திரையிடப்பட்டது.
இதனால் காலையிலேயே ரசிகர்கள் தியேட்டர்கள் முன் திரண்டனர். பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க கொண்டாடினர். சில இடங்களில் தியேட்டர் முன் ரசிகர்கள் ராட்சத கேக் வெட்டி ரசிர்களுக்கு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திருநெல்வேலியில், ஒரு தியேட்டரில் ரஜினி கட்அவுட்டுக்கு பாலாபிசேகம் செய்ய ஏற்பாடு செய்தனர். போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர். மதுரையில் சிறைக்கைதிகள் போல வேடமணிந்து ரசிர்கள் வந்திருந்தனர். அதில் ரஜினியின் பிறந்த தேதி, மாதத்தை குறிக்கும் வகையில் 1212 என எண்ணுடன் வந்திருந்து அமர்க்களப்படுத்தினர்.
கனடாவிலும் இன்று ஜெயிலர் படம் வெளியானது. தியேட்டரில் ரஜினி ரசிர்கள் குத்தாட்டம் போட்டு கொண்டாடினர். பெங்களூருவில் படம் பார்த்து விட்டு வந்த ரசிகர்கள், மகிழ்ச்சியுடன் கருத்துக்களை பகிர்ந்தனர். ரஜினியின் வயதுக்கு ஏற்ற வேடம் கொடுத்து அதை சரியாக பயன்படுத்தி உள்ளார் டைரக்டர் நெல்சன் என ரசிர்கள் கருத்து தெரிவித்தனர்.