சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு இணையதளமான BookMyShow ல் திங்கட்கிழமை வரை மொத்தம் 6,12,000 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. திரைப்பட வர்த்தக ஆய்வாளரான மனோபாலா விஜயபாலன் கூறுகையில், சனிக்கிழமையன்று சுமார் 85.53 கே டிக்கெட்டுகளும், ஞாயிற்றுக்கிழமை 233.15 கே டிக்கெட்டுகளும், திங்கட்கிழமை சுமார் 293.33 கே டிக்கெட்டுகளும் விற்பனையாகி உள்ளதாக கூறி உள்ளார். கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ஓப்பன்ஹெய்மர் மற்றும் கிரேட்டா கெர்விக்கின் பார்பி ஆகிய படங்களுக்குப் பிறகு சிங்கப்பூர் சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஜெயிலரும் உள்ளது. வட அமெரிக்க சந்தையில் அதிகம் எதிர்பார்க்கப்படும் முதல் ஐந்து தமிழ் திரைப்படங்களில் ஜெயிலரும் உள்ளது. அமெரிக்காவில் திங்கட்கிழமை வரை பிரீமியர் அட்வான்ஸ் விற்பனையில் சுமார் 664,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இது விஜயின் பீஸ்டை விட அதிகமாகும். விஜய் மற்றும் பூஜா ஹெக்டே முக்கிய வேடங்களில் நடித்த பீஸ்ட் படத்திற்கு, சுமார் 658,000 டாலர் மதிப்புள்ள டிக்கெட்டுகள் விற்பனையாகி இருந்தன. மொத்தம் சுமார் ரூ 6.86 கோடி மதிப்பிலான ஜெயிலர் திரைப்படத்தின் டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன.
பெங்களூருவில் ஆகஸ்ட் 10 ம் தேதி காலை 6 மணிக்குத் தொடங்கும் ஷோவுக்கான டிக்கெட்டுகள் ரூ.800 முதல் ரூ.1,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 10 ம் தேதி பெங்களூரில் அதிக எண்ணிக்கையிலான காட்சிகள் ஜெயிலருக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ‘ஜெயிலர்’ படம் முதல் நாளில் தோராயமாக ரூ.25 கோடி வரை வசூல் செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி தொடங்குவதால் குறைந்தது வசூல் ரூ.17-18 கோடியாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் உலகளவில் இப்படம் முதல் நாளில் கிட்டதட்ட ரூ.50 கோடிக்கும் மேலாக வசூல் செய்யலாம் என உறுதியாக நம்பப்படுவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கு காரணம் 6 வயது முதல் 60 வயது வரையிலான மக்கள் ரஜினிக்கு ரசிகர்களாக உள்ளனர். மேலும் ரஜினி வந்தாலே போதும், ஸ்டைல் பண்ணாலே போதும் என நினைப்பவர்கள் இன்றும் உள்ளனர். அதுமட்டுமல்லாமல் இந்தியாவிலேயே ரஜினிக்கு தான் வெளிநாடுகளில் அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர் இதனால் ஜெயிலர் படத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.