நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி நல்ல வசூல் பார்த்தது. இதில் பிறமொழிகளில் இருந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் நடித்து இருந்தனர். ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது. ரஜினிகாந்த் வேட்டையன் படத்தை முடித்து விட்டு கூலி படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இதன் படப்பிடிப்பு அடுத்த சில தினங்களில் நடக்க உள்ளது. இந்த படத்தை முடித்து விட்டு ஜெயிலர் 2-ம் பாகத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது..