Skip to content

சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்.. போலி பாஸ்போர்ட்.. திருச்சி மாவட்ட க்ரைம்..

வாலிபரை கத்தியால் தாக்கியவர் கைது.

திருச்சி, சிந்தாமணி, வெனிஸ் தெருவைச் சேர்ந்தவர் துமுகோ குமார் (35). இவர் அதே பகுதியில் உள்ள கிஷோர் என்பவரது செல்போனை பறித்து வைத்துக்கொண்டார். இதனால் கிஷோரின் நண்பனான கீழ சிந்தாமணி, பதுவை நகரைச் சேர்ந்த மனோஜ் என்பவர் துமுகோ குமாரிடமிருந்து செல்போனை மீட்டு மீண்டும் கிஷோரிடம் ஒப்படைத்தார். இதனால் ஆத்திரமடைந்த துமுகோ குமார், மனோஜை சிந்தாமணி புத்தக நிலையம் அருகே வைத்து கத்தியால் தாக்கியுள்ளார். காயமடைந்த மனோஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து மனோஜின் தாயார் ஜான்சி ராணி அளித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் வழக்கு பதிந்து துமுகோ குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கஞ்சா விற்ற இளைஞர் கைது..

திருச்சி, ராம்ஜி நகர் மில் காலனி அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக எ புதுார் போலீசாருக்கு ஜன 22ம் தேதி தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்ற அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (36) என்பவரை எ.புதுார் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

போலி பாஸ்போர்ட் ஒருவர் கைது…

நாமக்கல் மாவட்டம், கவுன்டம்பட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (34). இவர் கடந்த ஜன.22ம் தேதி லண்டன் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்தார். அங்கு இம்மிகிரேஷன் பரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் மணிகண்டன் போலி மதிப்பெண் சான்றிதழ் வழங்கி பாஸ்போர்ட் பெற்றது தெரியவந்தது. இது குறித்து இம்மிகிரேஷன் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் மண்கண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறை கைதியிடம் கஞ்சா பறிமுதல்….

தஞ்சாவூர் மாவட்டம், கரந்தை, கார தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன் (24). இவர் தஞ்சாவூர் கிழக்கு பகுதியில் செய்த கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு கடந்த 2024ம்ஆண்டு நவ.8ம் தேதி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த ஜன. 21ம் தேதி ஹரிஹரன் திருச்சி மத்திய சிறையில் இருந்து தஞ்சாவூர் கோர்ட் கூடுதல் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். இதைத்தொடர்ந்து அவரை மீண்டும் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து வந்தபோது அவரிடம் 7 கிராம் கஞ்சா இருப்பதை திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முக சுந்தரம் கண்டுபிடித்து அதை மணிகண்டனிடமிருந்து பறிமுதல் செய்துள்ளார். இது குறித்து திருச்சி மத்திய சிறை அதிகாரி சண்முக சுந்தரம் அளித்த புகாரின் பேரில் கேகேநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.