தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டை அடுத்த இலுப்பக் கோரை, உள்ளிக் கடை, கிருஷ்ணபுரம், பட்டுக்குடி, கணபதி அக்ரஹாரம் மணலூர், தேவன் குடி, சோமேஸ்வரபுரம், வீரமாங்குடி, மடம், செம்மங்குடி, அணக் குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல நூறு ஏக்கரில் கரும்பு சாகுபடி நடைபெற்று வந்தது. இந்ம பகுதியில் உளுந்து பயிரை தாக்கிய மஞ்சள் நோய், கரும்பையும் தாக்கியது. இதனால் கரும்பு சாகுபடி குறையத் தொடங்கியது. இதனால் நாட்டுச் சர்க்கரை, அச்சு வெல்லத்திற்கு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மணலூர் விவசாயி பாஸ்கர் கூறியதாவது:
மஞ்சள் நோய் தாக்குதலால் கரும்பின் வளர்ச்சி பாதித்தது, லாபமில்லாததால் கரும்பு சாகுபடியை விட்டு விட்டு, நெல்லுக்கு மாறி விட்டேன். இதுவும் ஒரு போகம் தான் . கரும்பு உற்பத்தி இல்லாததால் தன்னிடம் இயங்கி வந்த சாறு பிழியும் எந்திரம் மூலம் நடந்து வந்த நாட்டு சர்க்கரை தயாரிப்பை நிறுத்தி 3 வருடமாகிறது . இதற்காக உடுமலைப் பேட்டை, கரூர் உள்ளிட்டப் பகுதிகளிலிருந்து புரட்டாசி மாதம் வரும் தொழிலாளர்கள் சித்திரை, வைகாசி மாதம் வரை தங்கியிருந்து நாட்டு சர்க்கரை தயாரிப்பார்கள்.
கரும்பு சாகுபடி இல்லாததால் அவர்களுக்கும் வேலையில்லாமல் போனது. உள்ளூர் தொழிலாளர்களும் வேலையின்றி நூறு நாள் வேலை, கட்டட வேலைக்குச் செல்கின்றனர்
கரும்பு விளைச்சல் இல்லாததால் முன்பெல்லாம் நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் லாப நோக்கத்திற்காக லேசாக சீனியை கலப்பார்கள். இப்போது நாட்டுச் சர்க்கரை தயாரிப்பில் பெரும்பாலும் சீனி தான் சேர்க்கிறார்கள்.
பட்டுக்குடி பக்கமெல்லாம் 500 ஏக்கரில் கரும்பு சாகுபடி நடந்தது. அதில் பாதி வாழைக்கும், கரும்புக்கும் மாறி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவிந்த நாட்டுச் சேரி ஊராட்சித் தலைவரும், விவசாயியுமான ஜெய் சங்கர் கூறியதாவது: கிரஷர் ஓடாததாலும், கொப்பரையில் ஓட்டை விழுந்தும் லட்சக் கணக்கில் நஷ்டம் . வீரமாங்குடி அச்சு வெல்லத்திற்கு புவி சார் குறியீடு கிடைத்தும் பயனில்லை என்கின்றனர் விவசாயிகள். இதேப் போன்று உள்ளிக் கடையைச் சேர்ந்த விவசாயி ஜெயக் குமார் கூறுகையில் மஞ்சள் நோய் தாக்குதலால் 200 ஏக்கரில் சாகுபடி செய்யப் பட்ட கரும்பு 10, 15 ஏக்கராக குறைந்து விட்டது என்கிறார்.