தஞ்சாவூர் பனகல் பில்டிங் அருகில் ஜாக்டோ ஜியோ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் இளையராஜா, தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாவட்ட செயலாளர் சத்தியசீலன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு உள்ளாட்சி தணிக்கை பணி மன்ற மாநில தலைவர் அம்பேத்கர், தமிழக ஆசிரியர் கூட்டணி உயர்மட்ட குழு உறுப்பினர்கள் எழிலரசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு, ஆகியவற்றை உடன் வழங்க வேண்டும். மத்திய அரசு ஊழியர்களுக்கு நிகரான ஊதியம் வழங்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் இன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் நடக்கிறது.
இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெரும்பாலானோர் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் நிறைவுறையாற்றினார். இதில் திரளான ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர். ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் மதியழகன் நன்றி கூறினார்