தமிழரான பாலசுப்பிரமணியம் சிதம்பரம் என்பவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவரது பெற்றோர் தமிழகத்திலிருந்து சிங்கப்பூருக்கு சென்ற நிலையில் அங்கேயே செட்டில் ஆகிவிட்டனர். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் 21 ஆண்டுகளாக சிங்கப்பூரில் புராஜக்ட் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். பாலசுப்பிரமணியம் சிதம்பரம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியிலுள்ள முஸ்தபா ஜுவல்லரிக்குச் சென்றுள்ளார். அங்கு தனது மனைவிக்காக 6 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் மதிப்பில் தங்கச் சங்கிலி வாங்கியிருக்கிறார். அதாவது இந்திய மதிப்பில் 3,78,887 ரூபாய்க்கு தங்க சங்கலி வாங்கினார். இந்தக் கடையில் குறைந்தது 250 சிங்கப்பூர் டாலருக்கு பொருட்கள் வாங்குபவர்களுக்காக குலுக்கல் பரிசை அந்தக் கடை நடத்தி வந்திருக்கிறது. அந்த குலுக்கல் பரிசுப் போட்டிக்கு கூப்பனை எழுதி போட்டியிருந்தார் பாலசுப்பிரமணியம் சிதம்பரம்.
இந்நிலையில் அந்தக் குலுக்கலில் 10 லட்சம் அமெரிக்க டாலர்கள் பாலசுப்பிரமணியம் சிதம்பரத்திற்கு பரிசு கிடைத்துள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூ.8 கோடிக்கும் அதிகமானது இந்த பரிசுத்தொகையாகும். இந்த பரிசு கிடைத்தது குறித்து பாலசுப்பிரமணியம் சிதம்பரம் கூறுகையில், இன்று (நேற்று) என்னுடைய தந்தையின் 4-வது ஆண்டு நினைவு நாள் ஆகும். இந்தப் பரிசு என் தந்தையின் ஆசீர்வாதமாகவே நான் கருதுகிறேன். இந்த தகவலை எனது தாய்க்குத் தெரிவித்துவிட்டேன். இதில் கிடைக்கும் ஒரு பகுதி பணத்தை நான் சிங்கப்பூரில் தங்கியிருந்த பகுதியின் மேம்பாட்டுக்காக தானமாக தரப் போகிறேன் என்றார் .