கேரளாவில் பலாப்பழம் அதிக அளவில் உற்பத்தியாகும். இதில் ஆண்டுக்கு ரூ.600 கோடி அளவுக்கு பலாப்பழங்கள் வீணாகி வருகின்றன. இதனால் பலாப்பழ விவசாயிகள் கவலை அடைந்தனர். இந்த நிலையில் பலாப்பழம் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கேரளாவின் மலையோர கிராமமான இடுக்கியை சேர்ந்த 2 மாணவிகள் தெரிவித்தனர். இது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
கேரள மாநிலம் திருச்சூரில் தென்னிந்திய அறிவியல் கண்காட்சி நடக்கிறது. இதில் இடுக்கியை சேர்ந்த மாணவிகள் அக்சானா அலியார் மற்றும் மேரி ரோஸ் அபி இருவரும் பலாப்பழத்துடன் சென்று கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில் அவர்கள் பலாப்பழத்தில் உள்ள மாவு சத்தை தனியாக பிரித்தெடுத்து கரிமமாக்கி பிளாஸ்டிக் உருவாக்கலாம் என்றனர். இவ்வாறு உருவாக்கப்பட்ட பிளாஸ்டிக்கை நீராவி விசையாழி மூலம் செலுத்துவதன் மூலம் மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறி கண்காட்சியை ஆய்வு செய்ய வந்த நிபுணர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
முன்னதாக இந்த மாணவிகள் கேரள அரசு நடத்திய அறிவியல் கண்காட்சியிலும் இதே படைப்புக்காக பரிசு பெற்றனர். தற்போது தென்னிந்திய அறிவியல் கண்காட்சியிலும் இதனை காட்சி படுத்தியதன் மூலம் இனி கேரளாவில் பலாப்பழம் வீணாவது தடுக்கப்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது.