பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்வது அல்லது அரசியல் பிரமுகர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு உதவும் பிரமுகர்களை குறி வைத்து வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சியை பொருத்தவரை நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி காண்டிராக்டரான ஈஸ்வரமூர்த்தியின் வீட்டில் 2வதுநாளாக இன்றும் ஐடி ரெய்டு தொடர்ந்து வருகிறது. எடமலைப்பட்டி புதூரில் அவரது வீட்டில் தொடர்ந்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் திருச்சி கேகேநகரில் உள்ள தென்றல் நகரில் பெரியதம்பி, ரவி மற்றும் தியாகராஜன் ஆகியோருக்கு சொந்தமான sree infrotech நிறுவனத்தில் இன்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிறுவனம் கட்டுமானத்தொழில் செய்துவருவதோடு நெடுஞ்சாலைத்துறை மற்றும் பொதுப்பணித்துறை காண்டிராக்டர்களுக்கு பொருட்களை சப்ளை செய்து வருவதாக கூறப்படுகிறது.