இஸ்ரேல் மீது கடந்த மாதம் 7ம் தேதி ஹமாஸ், பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுவினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். அப்போது இஸ்ரேலில் இருந்து 200க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடத்தி சென்றனர். இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு மீது இஸ்ரேல் போர் அறிவித்தது.
இரு தரப்பும் மோதலில் ஈடுபட்டுள்ள நிலையில் காசாவில் இருந்து இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு ராக்கெட் தாக்குதல் நடத்தி வருகிறது. அதேவேளை, காசாமுனை மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாமுனைக்குள் நுழைந்த இஸ்ரேல் படையினர் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கு குழிகளை கண்டுபிடித்து அழித்து வருகின்றனர்.
போர் இன்று 36வது நாளாக நீடித்து வருகிறது. அக்டோபர் 7ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1,405 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தாக்குதலில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை தொடர்பான புதிய தகவலை இஸ்ரேல் தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி, ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 1400 பேர் கொல்லப்பட்டதாக முதலில் தெரிவித்த நிலையில் அதில் 200க்கும் மேற்பட்ட உடல்களை அடையாளம் காணமுடியாத சூழ்நிலை உள்ளது. இதனால், எஞ்சிய 200 பேரும் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது .
ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக பாலஸ்தீனத்தின் காசா முனை மீது இஸ்ரேல் நடத்தி வரும் தரைவழி, வான்வழி தாக்குதலில் இதுவரை 11 ஆயிரத்து 78 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் நடந்த மோதலில் இதுவரை 182 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.