லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
‘‘பெய்ரூட்டில் உள்ள சுரங்க அலுவலகத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா தங்கியிருக்கிறார். அடுத்த சில நாட்களில்அவர் வேறு இடத்துக்கு மாறிவிடுவார்’’ என்று ஈரானில் உள்ள மொசாட் உளவாளி இஸ்ரேல் ராணுவத்துக்கு உறுதியான தகவல்அளித்தார். அமெரிக்காவில் முகாமிட்டிருந்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. ஹசன் நஸ்ரல்லா மீது உடனடியாக தாக்குதல் நடத்த நெதன்யாகு உத்தரவிட்டார். அடுத்த சில நிமிடங்களில் இஸ்ரேல் விமானப் படையின் போர் விமானங்கள் பெய்ரூட் நோக்கிசீறிப் பாய்ந்தன. அமெரிக்க தயாரிப்பான ஜிபியு-31 ஜேடிஏஎம் ரககுண்டுகள், இஸ்ரேல் தயாரிப்பான ஸ்பைஸ்-200 ரக குண்டுகள் ஹிஸ்புல்லா தலைமை அலுவலகத்தின் மீது அடுத்தடுத்து வீசப்பட்டன.
மொத்தம் 80 குண்டுகள் ஹிஸ்புல்லாவின் சுரங்க அலுவலகத்தை துளைத்து வெடித்து சிதறின. ஒவ்வொரு குண்டும் தலா ஒரு டன் எடை கொண்டதாகும். இந்த தாக்குதலில் சுரங்க அலுவலகம் மண்ணோடு, மண்ணானது. 65 அடி ஆழத்துக்கு மிகப்பெரிய பள்ளம் உருவானது. ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ருல்லா உட்பட ஏராளமானோர் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். அந்த அமைப்பின் புதிய தலைவராக ஹஷேம் சபிதீன் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர் ஈரானுக்கு மிகவும் நெருக்கமானவர்.