இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் நடந்து வருகிறது. காசா மீது கடந்த அக்டோபர் தொடங்கி கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ்களை முழுமையாக அழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் இஸ்ரேல் பிடிவாதம் காட்டி வருகிறது.
சுதந்திரமான பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இயங்கும் ஈரான் ஆதரவு கொண்ட ஹிஸ்புல்லாக்களை எதிர்த்து தற்போது லெபனான் மீதும் தாக்குதலை வலுப்படுத்தி வருகிறது இஸ்ரேல். இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் மேலும் வலுப்பெற்றுள்ளது. இது சர்வதேச அளவில் அச்சத்தைக் ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 17-ம் தேதி ஹிஸ்புல்லா இயக்கத்தினர் பயன்படுத்திய 5,000 பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின. இதில் பலர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது மிகப் பெரிய அளவில் தாக்குதல் நடத்துவோம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.
இதனைத் தொடர்ந்து, சில தினங்களுக்கு முன்பு லெபனானில் ஹிஸ்புல்லா இயக்கத்தினரைக் குறிவைத்து இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் 14 பேர் உயிரிழந்தனர். இவ்வாறு மோதல் நீடித்துக்கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், லெபனானில் புதிதாக இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 500 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெண்கள், குழந்தைகளும் அடங்குவர். மேலும், 1500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2006 ம் ஆண்டுக்குப் பின்னர் இஸ்ரேலுக்கும் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் இப்போதைய மோதல்தான் மிகக் கொடூரமானதாகக் கருதப்படுகிறது.
இஸ்ரேல் ராணுவம் தெற்கு, கிழக்கு லெபனானில் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில் தெற்குப் பகுதியின் துறைமுக நகரான சிடோனில் இருந்து மக்கள் குடும்பம் குடும்பமாக உடைமைகளுடன் பெயரத் தொடங்கியுள்ளது. தலைநகர் பெய்ரூட் நோக்கி மக்கள் பெயர்ந்து வருகின்றனர்.