ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியா கடந்த ஜூலை 31-ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் படுகொலை செய்யப்பட்டார். இதன் பின்னணியில் இஸ்ரேல் உளவுத் துறை இருப்பதாக ஈரான் பகிரங்கமாக குற்றம் சாட்டியது. இந்த நிலையில் கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கடந்த 1-ம் தேதி இஸ்ரேல் பகுதிகளை குறிவைத்து ஈரான் ராணுவம் 180 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்காக ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆனால் இதுவரை ஈரான் மீது நேரடி தாக்குதல் நடத்தப்படவில்லை. எனினும் ஈரானின் பொருளாதாரத்தை முடக்கும் வகையில் அமெரிக்க அரசு, அந்த நாட்டின் மீது நேற்று முன்தினம் புதிய பொருளாதார தடைகளை விதித்தது. இதன்படி ஈரானில் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியில் ஈடுபட்டிருக்கும் 10 நிறுவனங்களுக்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது. இந்த சூழலில் ஈரான் அரசு நிர்வாகம், நாடாளுமன்றம், சட்டப்பேரவை நிர்வாகம் மற்றும் நீதித் துறை நிர்வாகத்தை குறிவைத்து இஸ்ரேல் உளவுத் துறை தொடர் சைபர் தாக்குதல்களை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் காரணமாக ஈரான் அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கியிருக்கிறது. குறிப்பாக ஈரானின் அணுசக்தி தளங்கள், எரிசக்தி, மின் விநியோக கட்டமைப்பின் செயல்பாடுகள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. ஈரான் முழுவதும் உள்ள வங்கிகள் முடங்கி உள்ளன. ஏடிஎம் மையங்களில் இருந்து பணம்கூட எடுக்க முடியவில்லை. இதுகுறித்து ஈரான் சைபர் கவுன்சில் முன்னாள் செயலாளர் பெரோஸ்பாடி, ஈரான் இன்டர்நேஷனல் என்ற ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ஈரானின் அனைத்து அரசு துறைகள் மீதும் சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளன. மிக முக்கிய ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. ஈரானின் அணுசக்தி தளங்கள், எண்ணெய் குழாய் கட்டமைப்பு, போக்குவரத்து, துறைமுகங்கள் ஆகியவற்றின் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. ஈரான் அணுசக்தி தளங்களின் ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டு உள்ளன. ஈரான் முழுவதும் குழப்பமான சூழல் நிலவுகிறது என பெரோஸ்பாடி கூறியுள்ளார்.