Skip to content
Home » 2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

2 நாளில் ஹிஸ்புல்லா பேஜர்,வாக்கி டாக்கி வெடித்து 9 ஆயிரம் பேர் படுகாயம்.. லெபானில் பதற்றம் .

  • by Senthil

காசா போர் தொடங்கிய கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதியில் இருந்தே ஹமாசுக்கு ஆதரவாக லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த அமைப்பு ஈரான் ஆதரவில் செயல்படும் அமைப்பாகும். இந்த நிலையில், லெபனானில் கடந்த 2 நாட்கள் அடுத்தடுத்து பேஜர், வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறிய விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதவிர, வீடுகளின் மேற்கூரையில் பொருத்தி இருந்த சோலார் பேனல் உள்ளிட்ட மின்சாதனங்கள் வெடித்துச் சிதறி உள்ளன. இந்த சம்பவங்களில் 37 பேர் பலியாகி உள்ளனர். 2,931 பேர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம்சாட்டி உள்ளது. செல்போன் பயன்படுத்தினால் இஸ்ரேல் கண்காணித்திடும், ஒட்டு கேட்கும் என்பதால் ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு பேஜர், வாக்கி டாக்கிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ரகசியமாக வெடிபொருளை வைத்து ஏற்றுமதி செய்த இஸ்ரேல், இப்படியொரு நூதன தாக்குதலை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. இந்நிலையில், அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதலால் லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி பயன்படுத்த பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.  அடையாளம் தெரியாத மின்சாதனங்களை தொட வேண்டாம் என லெபனான் அரசு எச்சரித்துள்ளது. மேலும், தலைநகர் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் யாரும் பேஜர், வாக்கி டாக்கி கொண்டு செல்லக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை விமானத்தில் பேஜர், வாக்கி டாக்கிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா முகாம்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான் வழி தாக்குதல் நடத்தி உள்ளது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைகளுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காசா போரை இஸ்ரேல் தற்போது லெபனான் வரை நீட்டித்து, மத்திய கிழக்கில் மேலும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ளன. பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலுக்கு பதிலடியாக, தெற்கு லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா படையினர் ராக்கெட் மற்றும் டிரோன் ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இஸ்ரேலின் எல்லை பகுதியான அப்பர் கலிலீவில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேர் பலியாகி உள்ளனர். 16 பேர் காயமடைந்துள்ளனர்.  பேஜர், வாக்கி டாக்கி தாக்குதலை தொடர்ந்து ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா முதல் முறையாக நேற்று தனது தொலைக்காட்சி உரையில், ‘‘பேஜரை வெடிக்க வைத்து ஒரே நிமிடத்தில் 4,000 அப்பாவி மக்களை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்டது. அடுத்த நாள் ஒரே நிமிடத்தில் 5,000 பேரை கொல்ல அவர்கள் சதி செய்தனர். இந்த தாக்குதல் மூலம் அனைத்து சிவப்பு எல்லையையும் இஸ்ரேல் மீறிவிட்டது. நாங்கள் பலத்த அடியை சந்தித்துள்ளோம். ஆனாலும் நாங்கள் வீழ்ந்துவிட மாட்டோம். இன்னும் வலுவுடன் திரும்பி வருவோம். காசா போர் ஓயும் வரை எங்களின் தாக்குதல் நிற்காது.’’ என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!