கோவை அடுத்த வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டடங்கள் ஆகியவை உரிய அனுமதியின்றி மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையில், வன விலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், எனவே அதனை அகற்ற உத்தரவிட வேண்டும் எனவும் கோரி கோவை வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட இந்த வழக்கு தொடர்பாக தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “ஈஷா மையத்தில் 109 ஏக்கர் பரப்பளவிலான நிலத்தில் விதிமீறி கட்டப்பட்ட ஆதியோகி சிலை உள்ளிட்ட கட்டிட பணிகளை நிறுத்துவதற்கான உத்தரவும், மூடி சீல் வைப்பதற்கான உத்தரவும் கடந்த 2012-ம் ஆண்டில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஈஷா யோகா மையம் சார்பில் அரசிடம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆதியோகி சிலை அமைக்கப்பட்டதற்கான நோக்கம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டிருந்தது” என அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், சம்பந்தப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி அல்லது கட்டுமான அனுமதி வழங்கியது தொடர்பான எந்த ஆவணங்களும் தங்களிடமோ அல்லது இக்கரை பூலுவம்பட்டி பஞ்சாயத்து அலுவலகத்திலோ இல்லை என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழிபாட்டுத் தலத்துக்கான, மாவட்ட கலெக்டரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து பெறப்படும் சான்றிதழ் என எதுவுமே ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அதே போல் கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேஷன் நிர்வாகி பெறவில்லை என்றும், அதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என்றும் அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் சம்பந்தப்பட்ட கட்டிடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரியவந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டுள்ளனர்.