கானா பாடகி ‘ஐ எம் சாரி ஐயப்பா’ என்ற பாடலை பாடியதற்கு நடிகர் எம்.எஸ். பாஸ்கர் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோயில் குறித்து சர்ச்சையைக் கிளம்பும் வகையில் பாடலை பாடிய இசைவாணிக்கு எதிராக பிரபல குணச்சித்திர நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் குரல் எழுப்பியுள்ளார்.கானா பாடகி இசைவாணி பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கானா பாடல்களை பாடி பிரபலமடைந்தவர். மேலும், இவர் பிக்பாஸ் சீசன் 5-இல் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். அதுமட்டுமின்றி தனியார் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 2019 ஆண்டு ”I am sorry ayyappa” என்ற பாடலை பாடியுள்ளார். மேலும் இந்த பாடலை பல்வேறு நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பாடி வந்துள்ளார்.
இந்த பாடல் அண்மையில் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து சர்ச்சையாகி எதிர்ப்புகள் கிளம்பியது. மேலும் தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா இந்த விவகாரத்தில் பாடகி இசைவாணியை தமிழ்நாடு காவல்துறை ஏன் கைது செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இது குறிப்பிட்ட மக்களின் நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாகக் கண்டன குரல்கள் எழுந்தன.மேலும் இசைவாணி பாடிய பாடலுக்கு தற்போது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் சபரிமலை ஐயப்பன் பாடல் விவகாரத்தில் தன் கருத்தை மேலாளர் வாயிலாக பதிவு செய்துள்ளார்.
அதில், ”நான் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். சமீபத்தில் இசைவாணி அவர்கள் பாடியிருந்த ‘ஐயாம் சாரி ஐயப்பா’ பாடல் கேட்டேன்! சுவாமி ஐயப்பனிடம் மன்னிப்பு கேட்டு பாடத் தொடங்கிய விதம் அருமை, நல்ல குரல் வளம். ஆடிக்கொண்டே பாடிய ஸ்டைல் அற்புதம்! ஒரே ஒரு குறை! பாடல் தெளிவாக கேட்காத அளவுக்கு வாத்தியங்களின் ஓசை அதிகம்.
இதைப்போன்ற கருத்தாழமுள்ள பாடல்களை சபரிமலை அருகிலேயே மேடையிட்டு விஷு, மகரஜோதி போன்ற விசேஷ நேரங்களில் பாடுவது இன்னும் சிறப்பாக இருக்கும்! இவர்களுக்கும் ‘பூசை’ சிறப்பாக நடக்கும்! நான் சிறுவனாக இருந்த போது எனது மூத்த சகோதரர் சபரிமலைக்கு இருமுடி கட்டி, வாய்க்கரிசி வாங்கி செல்வதை கண்டிருக்கிறேன்.
அதே போல் இவர்களும் உறவினர்கள் நண்பர்களிடம் வாய்க்கரிசி வாங்கிக் கொண்டு சென்று இசை நிகழ்ச்சி நடத்தலாம்! பாடல் எழுதியவரையும் அறிமுகப்படுத்தலாம். இப்படிப்பட்ட அருமையான பாடலை தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என எல்லா மொழிகளிலும் பாடலாம்.எல்லா மொழி பக்தர்களும் கேட்டு ‘பரிசளிப்பார்கள்’ அல்லவா? யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பாடலாம். என்ன ஒன்று. ஐயன் ஐயப்பன் இதை ‘நிந்தா ஸ்துதி’யாக ஏற்றுக்கொள்வார்! அவர் வாகனமாகிய புலி ஏற்றுக் கொள்ளுமா என்று தெரியவில்லை! ‘ஐயாம் சாரி ஐயப்பா. அறிவு புகட்டி அனுப்பப்பா,” என்று கூறியுள்ளார்.