திருவண்ணாமலையில் பிறந்த நித்தியானந்தா, கடந்த சில வருடங்களாக தலைமறைவாக உள்ளார். அவர் தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் ஒரு தீவை விலைக்கு வாங்கி அதற்கு கைலாசா என பெயரிட்டு அங்கேயே சீடர்களுடன் தங்கி உள்ளார்.
இவர் மீது தமிழ்நாடு, கர்நாடகம், குஜராத் உள்பட பல மாநிலங்களில் வழக்கு உள்ளது. அடிக்கடி சமு்க வலைதளங்கள் மூலம் சொற்பொழிவாற்றி வந்த நித்தியானந்தா, கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நித்தியானந்தாவின் சகோதரி மகன் சுந்தரேஸ்வரன் நேற்று முன்தினம் காணொலி காட்சி மூலம் ஆன்மிக சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தபோது, இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். அப்போது அவர், “இந்து தர்மத்தை காப்பதற்காக சாமி உயிர் தியாகம் செய்துவிட்டார்” என்று கூறினார். இதனால், நித்தியானந்தாவின் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உண்மையில் நித்தியானந்தா இறந்துவிட்டாரா? அல்லது போலீஸ் வழக்கில் இருந்து தப்பிப்பதற்கான நித்தியின் புதிய யுக்தி இதுவா? என்பதை ஆமதாபாத் போலீசார் விசாரித்து வருகிறார்கள். ஒரு வேளை உண்மையிலேயே நித்தியானந்தா இறந்திருந்தால், அவருடைய ரூ.4 ஆயிரம் கோடி சொத்துகளுக்கு யார் அதிபதி? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. நடிகை ரஞ்சிதா கைக்கு செல்லுமா? அல்லது வேறு யாராவது உரிமை கோருவார்களா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.