பிரதமர் மோடி கன்னியாகுமரியில் இன்று தியானம் மேற்கொள்கிறார். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் தேர்தல் விளம்பரத்திற்காக அவர் இப்படி செய்கிறார். தேர்தல் நடத்தை விதிப்படி இதை தடை செய்ய வேண்டும் என கன்னியாகுமரி கலெக்டரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான கலெக்டரிடம் திமுக வழக்கறிஞர் அணி உள்பட பல்வேறு தரப்பினர் மனு கொடுத்தனர்.
பிரதமர் தியானம் இருக்கட்டும். ஆனால் அதை ஒளிபரப்பு செய்யக்கூடாது. தியானத்தை யாரும் ஒளிபரப்பக்கூடாது என பிரதமர் அறிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் ஆணையம் தடை செய்யவேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை வைத்தனர். ஆனால் தேர்தல் ஆணையம் இதை கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகை குறித்து கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரும், தேர்தல் அதிகாரியுமான ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், “பிரதமர் வருவது தேர்தல் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல. பிரதமரின் வருகையும், தியானமும் தனிப்பட்ட நிகழ்வு என்பதால் அனுமதி கோரப்படவில்லை. தனியார் பராமரிப்பில் உள்ள இடத்திற்கு தனிப்பட்ட நிகழ்விற்கு வருவதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறத் தேவையில்லை. தேர்தல் விதிமுறைப்படி பரப்புரை மேற்கொண்டாலோ அல்லது கூட்டம் கூட்டினாலோ நடவடிக்கை எடுக்கலாம்.” என விளக்கமளித்தார்.