கீழடி, கங்கைகொண்டசோழபுரம் ஆகிய இடங்களில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. இந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். கீழடி இணையதளத்தையும் இந்த விழாவில் முதல்வர் தொடங்கி வைத்தார்.
விழாவில; முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
5300 ஆண்டுகளுக்கு முன்னரே இரும்பு பயன்பாட்டில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் இருந்து தான் இது உலகுக்கு அறிமுகமாகி இருக்கவேண்டும். தமிழ் நிலபரப்பில் இருந்து தான் இரும்பின் காலம் தொடங்கி இருக்கிறது. கி.மு. 3500க்கு முன்பே தென்னிந்தியாவில் இரும்பு அறிமுகமாகி விட்டது.
இரும்பு தாதுவில் இருந்து இரும்பை பிரித்தெடுக்கும் தொழில் நுட்பம் தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் தொடங்கி இருக்கிறது. கதிரியக்க கால கணக்கெடுப்பு படி 3200 ஆண்டுகளுக்கு முன்னரே தாமிரபரணி நதிக்கரையில் நெல் வேளாண்மை தொடங்கி உள்ளது. கி. மு. 6ம் நூற்றாண்டில் நகர நாகரீகம் எழுத்தறிவும் தமிழகத்தில் தொடங்கி உள்ளது கீழடி ஆய்வு மூலம் தெரியவருகிறது. அறிஞர் பெருமக்கள் தமிழ்நாட்டின் தொல்லியல் துறையை பாராட்டி உள்ளனர்.
இது உலக மானுட இனத்துக்கு தமிழ் நிலப்பரப்பு வழங்கும் மாபெரும் கொடை என்று கம்பீரமாக சொல்லலாம். இந்த மாபெரும் மானுடவியல் ஆய்வு பிரகடனத்தை உலகுக்கு அறிவிக்கிறேன். இது தமிழர்களுக்கும், தமிழ் நிலப்பரப்புக்கும் பெருமை. இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பில் இருந்து தான் எழுதப்படும்.
இவ்வாறு அவர் பேசினார். விழாவில் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எ.வ. வேலு, தலைமைச்செயலாளர் முருகானந்தம் மற்று் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.