பிரபல யூடியூபரான இர்பான் கடந்த ஆண்டு ஆலியா என்கிற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மனைவி கர்ப்பமாக இருக்கும் நிலையில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்துகொள்ள துபாய் சென்ற இர்பான் அங்கு பரிசோதனை செய்து தெரிந்து கொண்டார். இது தொடர்பாக கடந்த 19-ம் தேதி தனது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்ட இர்பான், அதில் தனக்கு பிறக்க போகும் குழந்தையின் பாலினத்தை அனைவருக்கும் அறிவித்தார். இந்தியாவில் கருவில் இருக்கும் பாலினத்தை அறிவிப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இர்பான் தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை வெளிப்படையாக அறிவித்தது பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. கடந்த 21-ம் தேதி மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்), பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இந்த நிலையில் சம்மந்தப்பட்ட வீடியோவை டெலிட் செய்தார். இந்நிலையில், இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இர்பான் இல்லத்துக்குச் சென்ற சுகாதாரத் துறை அதிகாரிகள் நோட்டீஸை நேரடியாக வழங்கி விசாரணை நடத்தினர். அப்போது, தான் செய்தது தவறு எனவும், மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிடுவதாகவும் அதிகாரிகளிடம் இர்பான் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
![](https://www.etamilnews.com/wp-content/uploads/2024/05/இர்பான்-வீடியோ.jpg)