மேற்காசிய நாடான ஈராக்கில், தற்போது திருமண வயது, 18 ஆக உள்ளது. இதை, பெண்ணுக்கு 9 ஆகவும், ஆணுக்கு, 15 ஆகவும் குறைத்து, ஈராக் பார்லிமென்டில், அந்நாட்டு நீதித் துறை அமைச்சகம் மசோதா தாக்கல் செய்துள்ளது. இந்த புதிய மசோதாவின்படி குடும்ப விவகாரங்களில் முடிவெடுக்க, மத போதகர்கள் அல்லது நீதித்துறையை தேர்வு செய்ய குடிமக்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 9 வயது சிறுமியும், 15 வயது சிறுவனும் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ள முடியும். கடந்த ஜூலையில், இந்த மசோதாவை ஈராக் நீதித் துறை அமைச்சகம் பார்லி.,யில் தாக்கல் செய்தது. அப்போது கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை அடுத்து, மசோதா திரும்பப் பெறப்பட்டது. தற்போது, ஈராக்கில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால், பெண்ணின் திருமண வயதை குறைக்கும் மசோதாவை, ஈராக் நீதித் துறை அமைச்சகம் மீண்டும் தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதாவுக்கு, மனித உரிமை அமைப்புகள், பெண்கள் குழுக்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஐ.நா.,வின் குழந்தைகள் அமைப்பான, ‘யுனிசெப்’ தகவலின்படி, ஈராக்கில், 28 சதவீத பெண்கள், 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்கின்றனர் என்பது தெரியவந்துள்ளது.