Skip to content

வருண்குமார் வழக்கு : திருச்சி கோர்ட்டில் ஆஜராக சீமானுக்கு நோட்டீஸ்

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் திருச்சி  பிரமுகர்  சாட்டை துரைமுருகன்  கடந்த வருடம் கைது செய்யப்பட் போது அவரது செல்போனில் பதிவு செய்யப்பட்டிருந்த சில ஆடியோக்கள் ‘லீக்’ ஆனது.  சாட்டை துரைமுருகனுடன் பேசிய சீமான், மூத்த  நிர்வாகிகள் குறித்து அவதூறாக பேசியது அந்த  ஆடியோக்கள் மூலம் வெளியானது. அதனை சீமானும் மறுக்கவில்லை.

அதே நேரத்தில் திருச்சி எஸ்பி வருண்குமார் ஐபிஎஸ், சாட்டை துரைமுருகனின் செல்போன்களில் இருந்த ஆடியோக்களை எடுத்து கசிய விட்டதாக சீமான் பரபரப்பு  குற்றச்சாட்டை   கூறினார்.   மேலும் குறிப்பிட்ட சில சாதியினரை சாதி வன்மத்துடன் எஸ்பி வருண்குமார் அணுகி வருவதாக சீமான் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியாக இருந்த  வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

இதைத்தொடர்ந்து வருண்குமார் ஐபிஎஸ் தரப்பு சீமானுக்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில் அது தொடர்பாக 15 விளக்கத்தை சீமான் அளித்திருந்தார். ஆனால் தங்கள் கேள்விகள் எதற்கும் பதில் அளிக்கவில்லை எனக் கூறி வருண்குமார் திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். மேலும், புகார் தொடர்பாக கடந்த  மாதம் 30ம் தேதி திருச்சி நீதிமன்றத்தில் வருண்குமார் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

இதற்கிடையே வருண்குமார் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோரை டிஐஜியாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கடந்த 8ம் தேதி திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக வருண்குமார் ஆஜராகி தனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். இதனை குறித்துக் கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜனவரி 21ம் தேதிக்கு  ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணை நேற்று  திருச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு தொடர்பாக வருண்குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த ஆவணங்கள் சீமானுக்கு அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வரும் பிப்ரவரி 19ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.

ஏற்கனவே பெரியார் குறித்த பேச்சால் சீமானுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புகார் அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது வருண்குமார் ஐபிஎஸ் தாக்கல் செய்த அவதூறு வழக்கின் விசாரணைக்கும் சீமான் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!