நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் இன்றைய கூட்டத்தில் மக்களவையில் தி.மு.க. எம்.பி. கவுதம் சிகாமணி எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு மத்திய உள்விவகார துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்து பேசினார். அவர் பேசும்போது, நாட்டில் ஐ.பி.எஸ். அதிகாரி பதவிக்கு 864 காலி பணியிடங்கள் உள்ளன என கூறியுள்ளார். இந்த காலி பணியிடங்களானது பணி ஓய்வு, ராஜினாமா, மரணம், வேலையில் இருந்து நீக்கம் உள்ளிட்ட காரணிகளால் ஏற்படுகின்றன. நடப்பு 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வரை, ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கான பணியிடங்களின் மொத்த எண்ணிக்கை 4,984 ஆக உள்ளது. இவற்றில் 4,120 பேர் அதிகாரிகளாக பணியில் உள்ளனர் என கூறியுள்ளார். இதேபோன்று, ஐ.ஏ.எஸ். பதவிகளில் 1,472 காலி பணியிடங்களும், ஐ.எப்.எஸ். பதவிகளில் 1,057 காலி பணியிடங்களும் உள்ளன என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.