Skip to content

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடக்கம்: சென்னையிலும் கலைநிகழ்ச்சி

  • by Authour

இந்திய கிரிக்கெட்  ரசிகர்களுக்கு மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள  கிரிக்கெட் ரசிர்களுக்கான கோடை கால  விருந்தாக ஐபிஎல் போட்டி திகழ்கிறது.  அந்த வகையில்  18வது ஐபிஎல் போட்டி  நாளை  தொடங்குகிறது. இதில் 10 அணிகள் பங்கேற்கிறது. 10 அணிகளின் சார்பில் 62 வெளிநாட்டு வீரர்கள் உட்பட 182 வீரர்கள் பங்கேற்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் ரூ.639.15 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்டனர். இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்டை லக்னோ அணி ரூ.27 கோடிக்கும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.75 கோடிக்கும் பஞ்சாப் அணி வாங்கியது. வெளிநாட்டு வீரர்களில் ஜாஸ் பட்லர் ரூ.15.75 கோடிக்கு (குஜராத் அணி) வாங்கப்பட்டார்.

18வது ஐபிஎல்லில் விளையாடும் 10 அணிகளும், அதன் கேப்டன்கள் விவரமும் வருமாறு:

சென்னை சூப்பர் கிங்ஸ் (ருதுராஜ் கெய்க்வாட்)
டெல்லி கேபிடல்ஸ் (அக்சர் பட்டேல்)
குஜராத் டைட்டன்ஸ் (சுப்மன் கில்)
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (அஜின்கியா ரகானே)
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (ரிஷப் பண்ட்)
மும்பை இந்தியன்ஸ் (ஹர்திக் பாண்டியா)
பஞ்சாப் கிங்ஸ் (ஸ்ரேயாஸ் ஐயர்)
ராஜஸ்தான் ராயல்ஸ் (சஞ்சு சாம்சன்)
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ரஜத் படிதார்)
சன்ரைசர்ஸ் ஐதராபாத்( பேட் கம்மின்ஸ்)

ரூ.21 கோடி பரிசு

ஐபிஎல்லில் இந்த ஆண்டு மொத்தம் 78  லீக் போட்டிகள் நடைபெறும். இறுதிப்போட்டி  மே 25ம் தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. ஐபிஎல் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.21 கோடி பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 2ம் இடத்துக்கு ரூ.14 கோடியும், 3ம் இடத்துக்கு ரூ.7 கோடியும், 4ம் இடத்துக்கு ரூ.6.50 கோடியும் வழங்கப்பட உள்ளது. ஐபிஎல் தொடரின் மொத்த பரிசு தொகை ரூ.49 கோடியாகும்.

இதுவரை நடந்த போட்டிகளில் சென்னை,  மும்பை அணிகள்  தலா 5  முறை ஐபிஎல் கோப்பையை வென்று உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கு சில விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதற்காக பிஎல்லில் பங்கேற்கும் 10 அணிகளின் கேப்டன்களுடன் இந்திய கிரிக்கெட் வாரியம் மும்பையில் நேற்று ஆலோசனை நடத்தியது. இந்த கூட்டத்தில் கேப்டன்கள் ஒப்புதலுடன் இந்த புதிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

13வயது சிறுவன்

இந்த ஐபிஎல் தொடரில் தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா மற்றுல் உலக தரம் வாய்ந்த வீரர்கள் பங்கேற்றாலும் சில இளம் ரத்தங்கள் மீது அனைவரது பார்வையும் உள்ளது. ‘இளம் கன்று பயம் அறியாது’ என்பார்கள். அந்த வகையில் உலனின் முன்னணி வீரர்கள் பங்கேற்கும் தொடரில் இளம் கன்றாக களமிறங்க உள்ள வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரது கவனமும் உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.1.10 கோடிக்கு இந்த வீரரை ஏலம் எடுத்து உள்ளது. பீகாரை சேர்ந்த இவர் ரஞ்சி கோப்பை மற்றும் இந்திய ஜூனியர் அணிகளில் கலக்கி உள்ளார். இளையோர் டெஸ்டின் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 58 பந்துகளில் சதம் விளாசினார். ஐபிஎல்லில் குறைந்த வயதில் விளையாட போகும் வீரர் இவர்தான். இதற்கு முன்பு 16 வயதுக்கு கீழ் எந்த வீரரும் ஆடியதில்லை.

நாளை மாலை  ஐபிஎல்  தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி பிரமாண்ட துவக்க விழாவுடன் தொடங்க உள்ளது.

இதில், பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி, இந்திய ரேப்பர் மற்றும் பின்னணி பாடகரான கரண் அவுஜ்லாஆகியோரின் இசை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக நடப்பு ஆண்டு போட்டி நடைபெறும் கொல்கத்தா, ஐதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், அகமதாபாத், கவுகாத்தி, மும்பை, லக்னோ, பெங்களூரு, சண்டிகர், ஜெய்ப்பூர், டெல்லி, தர்மசாலா ஆகிய 13 இடங்களில் தொடக்க விழாவை நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த துவக்க விழாக்களில் பாலிவுட் பிரபலங்களான நடிகர்கள் சல்மான் கான், ஷாருக்கான், வருண் தவான், நடிகை ஸ்ரத்தா கபூர், பாடகர் அரிஜித் சிங் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. 13 இடங்களில் தொடக்க விழா நடத்தப்படுவது இது முதல்முறையாக இருந்தாலும், 2017ம் ஆண்டு நடந்த 10வது சீசன் தொடரின்போது 8 அணிகள் பங்கேற்ற நிலையில், அந்த 8 மைதானங்களிலும் தொடக்க விழா நடத்தப்பட்டது.

சென்னையில்  வரும் 23ம் தேதி,  முதல் ஐபிஎல் போட்டி நடக்கிறது. இதில் சென்னையும்,  மும்பையும் மோதுகிறது. இதற்காக  மும்பை அணி சென்னை வந்து விட்டது. அந்த அணிக்கு  கிரிக்கெட் வாரியம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

 

error: Content is protected !!