Skip to content
Home » ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

ஐபிஎல் டி20 சாம்பியன் யார்? இறுதி போட்டியில் இன்று ஐதராபாத் – கொல்கத்தா மோதல்..

ஐபிஎல் டி20 தொடரின் 17வது சீசனில் யார் சாம்பியன் என்பதை தீர்மானிக்கும் பரபரப்பான இறுதிப் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் இரவு 7.30க்கு தொடங்குகிறது. சென்னையில் கடந்த மார்ச் 22ம் தேதி கோலாகலமாகத் தொடங்கிய இத்தொடர், சென்னையிலேயே இன்று நிறைவடைகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுடன் நடையை கட்டியது. 6-10 இடங்களைப் பிடித்த டெல்லி, லக்னோ, குஜராத், பஞ்சாப், மும்பை அணிகளும் பரிதாபமாக வெளியேறின. இந்நிலையில், புள்ளிப் பட்டியலில் முதல் 4 இடங்களைப் பிடித்த கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன. ஐதராபாத்துக்கு எதிராக குவாலிபயர்-1ல் வென்ற கொல்கத்தா அணி நேரடியாக பைனலுக்கு முன்னேறியது. எலிமினேட்டரில் ஆர்சிபி அணியை வீழ்த்திய ராஜஸ்தான், சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடந்த குவாலிபயர்-2ல் சன்ரைசர்ஸ் அணியிடம் மண்ணைக் கவ்வியது. இதையடுத்து, ஐபிஎல் தொடரின் 17வது சீசன் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான பைனலில் முன்னாள் சாம்பியன்களான நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதுவரை நடந்துள்ள தொடர்களில் கொல்கத்தா 2 முறையும் (2012, 2014), சன்ரைசர்ஸ் ஒரு முறையும் (2016) கோப்பையை கைப்பற்றி உள்ளன. கொல்கத்தா 4வது முறையாகவும், ஐதராபாத் 3வது முறையாகவும் பைனலில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது. இன்றைய பைனலில் வென்று கோப்பையை முத்தமிடும் அணிக்கு முதல் பரிசாக ரூ.20 கோடி வழங்கப்படும். 2வது இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி கிடைக்கும். முறையே 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த ராஜஸ்தான் அணிக்கு ரூ.7 கோடி, ஆர்சிபி அணிக்கு ரூ.6.5 கோடி வழங்கப்படுகிறது. ரன் குவிப்பு மற்றும் விக்கெட் வேட்டைக்கான ஆரஞ்சு/ஊதா தொப்பிகளை வசப்படுத்தும் வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் வழங்கப்படும்.  தொடரின் நம்பிக்கை நட்சத்திரமாக (எமர்ஜிங் பிளேயர்) உருவெடுத்த வீரர் ரூ.20 லட்சம், மிக மதிப்பு வாய்ந்த வீரர் ரூ.12 லட்சம் பெற உள்ளனர்.நடப்பு தொடரின் மொத்த பரிசுத் தொகை: ரூ.46.5 கோடி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *