ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றிரவு (திங்கட்கிழமை) பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடக்கும் 24-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது. இதுவரை 4 ஆட்டங்களில் ஆடியுள்ள சென்னை அணி 2 வெற்றி (லக்னோ, மும்பைக்கு எதிராக), 2 தோல்வி (குஜராத், ராஜஸ்தானுக்கு எதிராக) கண்டுள்ளது.
ராஜஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த சென்னை அணி வெற்றிப்பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது. பேட்டிங்கில் டிவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், ரஹானே, கேப்டன் டோனி, பந்து வீச்சில் ஜடேஜா, துஷர் தேஷ்பாண்டே நல்ல நிலையில் உள்ளனர்.
பெங்களூரு அணியும் 2 வெற்றி (மும்பை, டெல்லிக்கு எதிராக) 2 தோல்விகளுடன் (கொல்கத்தா, லக்னோவுக்கு எதிராக) 4 புள்ளிகளை பெற்றுள்ளது. பெங்களூரு அணி கேப்டன் பிளிஸ்சிஸ் (2 அரைசதம் உள்பட 197 ரன்), முன்னாள் கேப்டன் விராட் கோலி (3 அரைசதத்துடன் 214 ரன்), மேக்ஸ்வெல் (ஒரு அரைசதத்துடன் 100 ரன்) ஆகியோர் பேட்டிங்கின் தூண்களாக உள்ளனர்.
இரு அணிகளும் ஏறக்குறைய சரிசம பலத்துடன் மல்லுகட்டுவதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம். குறைவான பவுண்டரி தூரம் கொண்ட இங்கு ரசிகர்கள் ரன் மழையை தாராளமாக எதிர்பார்க்கலாம். இங்கு இந்த சீசனில் இதுவரை நடந்துள்ள 3 ஆட்டங்களில் 57 சிக்சர்கள் அடிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.