Skip to content

தல தோனி கிரிக்கெட்டில் ஓய்வு?….

  • by Authour

கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த கேப்டனாக ரசிகர்களால் கொண்டாடப்படும், மகேந்திர சிங் தோனி இன்றுடன் ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 43 வயதான தோனி, கடந்த 2020ம் ஆண்டே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். ஆனாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடி வந்தார். இந்நிலையில் தான், சேப்பாக்கம் மைதானத்தில் டெல்லி அணிக்கு எதிரான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்றைய போட்டியின் முடிவில், ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என சிஎஸ்கே அணியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிஎஸ்கே மேனேஜர் போட்ட பதிவு:

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மேலாளர் ரஸல், திடீரென தோனியுடன் தான் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், சில நினைவுகள் வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதோடு முன்னாள் கிரிக்கெட் வீரரான பிரன்னா எனப்படும் பீடாக், ”சனிக்கிழமை போட்டியானது அவருடைய கடைசி ஐபிஎல் போட்டியாக இருக்காது என நம்புகிறேன்” என சூசகமாக குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவுகளின் கீழ் தோனி ஓய்வை அறிவிக்கப் போகிறாரா? என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இதனிடையே, சர்வதேச போட்டிகளில் அறிமுகமாகாத இளம் வீரர் ஒருவரை, நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் பாதியில் ஒப்பந்தம் செய்ய சென்னை திட்டமிடுவதாகவும் அண்மையில் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை அவரு தோனிக்கான மாற்று வீரரோ? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

ஃப்ளெமிங் சொன்ன விளக்கம்:

கிரிக்கெட் உலகின் மிகச்சிறந்த ஃபினிஷரான தோனி, சமீப காலமாக இக்கட்டான சூழலில் கூட 8 மற்றும் 9வது வீரராக களம் காண்கிறார். இது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதோடு, பல்வேறு தரப்பில் இருந்து விமர்சனங்களும் குவிந்து வருகின்றன. இதுதொடர்பாக பேசியிருந்த சிஎஸ்கே பயிற்சியாளர் ஃப்ளெமிங், தோனிக்கு 43 வயதாகிவிட்டது. முன்பை போன்று அவரால் 10 ஓவர்கள் நிலைத்து நின்று ஆடி களத்தில் ரன்களுக்காக ஓட முடியாது” என விளக்கமளித்தார்.

குவிந்த விமர்சனங்கள்:

சுறுசுறுப்பாக இருக்க முடியாது என்றால் ஏன் தோனியை இன்னும் அணியில் வைத்திருக்கிறீர்கள்? அவரது புகழை பயன்படுத்தி ரசிகர்களிடையே பணம் பார்க்க சென்னை அணி இந்த பணியை செய்து வருகிறதா? என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பினர். தோனியை தவிர வேறு யாரேனும் இந்த நிலையில் இருந்தால், அவர் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்றும் கேள்வி எழுப்பினர். முன்னாள் வீரர் சேவாக்கூட, சென்னை அணியில் கூடுதல் சுமையாக தோனி இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் தான் தோனி இன்றுடன் ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் திடீரென தோனி ஓய்வை அறிவிப்பது எல்லாம் புதிது கிடையாது.  ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரின் போது கூட, திடீரென அவர் தனது டெஸ்ட் ஓய்வை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் ஒருமுறை கேப்டன் தோனி?

முன்பு ஒருமுறை ஓய்வு குறித்து கேட்டபோது, “சேப்பாக்கத்தில் சென்னை ரசிகர்களை காணாமல் எப்படி ஓய்வு பெற முடியும்” என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் தான், டெல்லி அணிக்கு எதிரான சென்னையின் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. அதேநேரம், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் காயம் காரணமாக அவதிப்பட்டு வருவதகாவும், இதனால் இன்றைய போட்டியில் தோனி கேப்டனாக செயல்படக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக தனக்கு பிடித்த சேப்பாக்கம் மைதானத்தில், ஐபிஎல் வரலாற்றின் சிறந்த கேப்டனான தோனி, மீண்டும் கேப்டனாக கடைசியாக ஒருமுறை செயல்பட்டு தனது ஓய்வை அவர் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை அத்தகைய அறிவிப்பை அவர் வெளியிட்டால் தோனி ரசிகர்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களுக்கும் இது ஒரு பேரிடியாக அமையாலாம். என்ன நடக்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம்.

கடந்த 2008ம் ஆண்டு தொடங்கி 16 ஆண்டுகள் சிஎஸ்கே அணிக்காக விளையாடிய தோனி, கேப்டனாக 5 முறை கோப்பையையும் வென்று கொடுத்துள்ளார். ஐபிஎல்  வரலாற்றில் சென்னை அணி மிக முக்கியமான, ரசிகர்களால் கொண்டாடப்ப்டும் அணியாக திகழவும் அவர் முக்கிய காரணமாக உள்ளார்.

error: Content is protected !!