Skip to content

ஐபிஎல்: சென்னையை சுருட்டி எறிந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா

 ஐபிஎல்  போட்டியின் 22-வது ஆட்டம் நேற்று  இரவு  பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில்  நடந்தது.  டாஸ்வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார். பிரியான்ஷ் ஆர்யாவின் அற்புதமான இன்னிங்ஸால் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்களைக் குவித்தது.

220 ரன்கள் இலக்கை நோக்கி பேட்டிங் செய்த சென்னை அணி சீராக ரன்களைச் சேர்த்த போதிலும், பிரமாண்ட இலக்கை எட்ட முடியவில்லை.

12 பந்துகளை எதிர்கொண்ட தோனி 27 ரன்களைக் குவித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழந்ததால் அணியின் நம்பிக்கை தகர்ந்தது. 20 ஓவர்கள் முடிவில் சென்னை 5 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பஞ்சாப் அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக பஞ்சாப் அணியில் தொடக்க வீரர்களாக பரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினார்.

முதல் ஓவரில் இருந்தே பரியான்ஷ் ஆர்யா சிறப்பாக ஆடினார்.  அடுத்தடுத்து பஞ்சாப் அணிக்கு விக்கெட்டுகள் சரிந்தாலும், பரியான்ஷ் ஆர்யா அந்த அணிக்கு தூணாக நின்று  ஆடினார். அவர் 19 பந்துகளில் அரை சதம் அடித்தார். பவர்ப்ளே முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்து இருந்தது.

ஆனால் இதற்கு பிறகு ஆட்டம் சற்று சென்னை அணிக்கு சாதகமாக மாறியது. ரவிச்சந்திரன் அஷ்வின் வீசிய 8வது ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது. எட்டாவது ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 83 ரன்கள் சேர்த்திருந்தது.

ஆனால் பிரியான்ஷ் ஆர்யாவோ சிக்ஸ்களும் பவுண்டரிகளும் விளாசி சென்னை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்தார்.

பதிராணா வீசிய 13வது ஓவரில் பிரியான்ஷ் ஆர்யா அடுத்தடுத்து 3 சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து ஸ்கோரை 150 ரன்களுக்கு உயர்த்தினார். மற்றும் 39 பந்துகளிலே சதம் அடித்தார்.

ஆனால் இந்த மகிழ்ச்சி நீண்ட காலம் நீடிக்கவில்லை, நூர் அகமது வீசிய 14வது ஓவரில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து 103 ரன்கள் சேர்த்து பிரியான்ஷ் ஆர்யா அவுட் ஆனார்.

இதனை அடுத்து ஆட்டத்தின் வேகம் சற்று குறைந்தாலும், ஷஷாங்க் சிங் மற்றும் மார்கோ ஜென்சென் அவ்வப்போது சிக்ஸ் மற்றும் பவுண்டரிகளை அடித்து பஞ்சாப் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணியானது 6 விக்கெட் இழப்புக்கு 219 ரன்கள் சேர்த்திருந்தது.

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே பௌலர்கள் வயிற்றில் புளியை கரைத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டார் பிரியான்ஷ் ஆர்யா. அவருக்கு வயது வெறும் 24 தான்.

அவரை கட்டுப்படுத்த அடுத்த பந்தே வாய்ப்பு கிடைத்தது. ஆனால் கோட்டை விட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். அதன் பின்னர் பிரியான்ஷ் ஆர்யா ஆடிய ஆட்டத்தை  சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மற்றும் அந்த அணி நிர்வாகம் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விடவே முடியாது. அவர் ஆடிய ஆட்டம் கிட்டதட்ட 11 ஆண்டுகளுக்கு முன்பு வான்கடே மைதானத்தில் பிளேஆஃபில் சிஎஸ்கேவின் கனவை சேவாக் நொறுக்கிய ஆட்டத்தை நினைவு படுத்தியது. பிரியான்ஷ் ஆர்யாவை எவ்வாறு அவுட் ஆக்குவது என தெரியாமல் சென்னை அணியினர் திணறினர்.

பிரியான்ஷ் ஆர்யா டெல்லியைச் சேர்ந்தவர். அவரது பெற்றோர்கள் டெல்லியில் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணிபுரிகிறார்கள். கௌதம் கம்பீரின் முன்னாள் பயிற்சியாளரான சஞ்சய் பரத்வாஜிடம் பயிற்சி பெற்றவர். மேலும் டெல்லி பல்கலைகழகத்தில் பிஏ பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த ஆண்டு டெல்லி பிரிமியர் லீக்கில் அவர் மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டினார்.

குறிப்பாக, தெற்கு டெல்லி சூப்பர்ஸ்டார்ஸ் அணிக்காக விளையாடிய அவர் வடக்கு டெல்லிக்கு எதிரான ஒரு ஆட்டத்தில் மனன் பரத்வாஜ் எனும் இடது கை சுழற்பந்து வீச்சாளரின் ஓவரில் ஆறு பந்துகளையும் சிக்ஸர்களுக்கு விரட்டி மிரட்டினார். அவரது அணி 20 ஓவர்களில் 308 ரன்கள் குவித்தது.

அந்த போட்டியின் மூலம் கவனம் பெற்றவருக்கு சையது முஷ்டாக் அலி கோப்பையில் டெல்லி அணி சார்பாக விளையாட இடம் கிடைத்தது. அதில் உத்தரப் பிரதேசத்துக்கு எதிராக ஒரு மிரட்டல் ஆட்டம் ஆடினார்.

புவனேஷ்வர் குமார், பியூஷ் சாவ்லா உள்ளிட்ட நட்சத்திர பந்துவீச்சாளர்கள் இருந்த அந்த அணிக்கு எதிராக, 43 பந்துகளில் 10 சிக்ஸர்கள் ஐந்து பவுண்டரிகளை அடித்து 103 ரன்கள் எடுத்தார்.

கிட்டத்தட்ட அதே போன்ற ஒரு ஆட்டத்தை சென்னை அணிக்கு எதிராக தற்போது பிரியான்ஷ் ஆர்யா விளையாடியுள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடந்த ஐபிஎல் ஏலத்தில் பிரியான்ஷை எடுக்க டெல்லி, பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. 3 கோடியே 80 லட்சம் கொடுத்து அவரை ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி.  ரிக்கி பாண்டிங் இவரை ஸ்பெஷல் ஓப்பனிங் பேட்ஸ்மேன் என முன்பே கூறினார்.

பிரியான்ஷுக்கு ஐபிஎல் தொடரில் ஜஸ்ப்ரீத் பும்ராவை எதிர்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

 நேற்றைய போட்டியில் சென்னை அணியின் மோசமான பீல்டிங்காலும், பிரியான்ஷ் ஆர்யாவின்  அதிரடியாலும் சென்னை  தோற்றது. இதுவரை 5 போட்டிகளில் ஆடிய சென்னை ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிபட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.

இன்று இரவு ஆமதாபாத்தில் நடைபெறும் போட்டியில்  குஜராத்தும், ராஜஸ்தானும் மோதுகிறது.  குஜர8ாத் புள்ளிபட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.  இதில் வெற்றி பெற்றால் முதலிடத்திற்கு செலுத்தும்.  ராஜஸ்தான் 7வது இடத்தில் உள்ளது.

error: Content is protected !!