ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். அப்பகுதியில் வியாபாரம் செய்து வரும் இவருக்கு இரண்டு பெண்கள். மூத்த மகளுக்கு திருமணமாகி விட்ட நிலையில், இளைய மகளுக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளார். இதற்கான அழைப்பிதழை உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று கொடுத்தார். திருமண அழைப்பிதழை வாங்கி பார்த்தவர்கள், ஆச்சரியமடைந்தனர்.
காரணம் அது, 2,000 ரூபாய் நோட்டு வடிவில் இருந்தது. ஒரு சிலர் இது அசல் ரூபாய் நோட்டு தானோ என ஏமாந்து விட்டனர். நோட்டின் சீரியல் நம்பர் மற்றும் 2000 ரூபாய் என்று இருக்கும் இடத்தில் திருமண தேதி இருக்கிறது. மேலே, மணமகன்- மனமகளின் பெயர் இடம் பெற்றுள்ளது. நோட்டின் பின்பகுதியில் திருணம் எங்கு நடைபெறுகிறது, நிகழ்ச்சி நிரல் என்ன என்று அனைத்து தகவல்களும் உள்ளது. இந்த வித்தியாசமான திருமண அழைப்பிதழ் அனைவரையும் கவர்ந்தது. வெங்கடேஷ் தனது மூத்த மகளின் திருமணத்துக்கு ஏடிஎம் கார்டு வடிவில் அழைப்பிதழ் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.