சமூகவலைத்தளங்கள் வளர்ச்சி அடைந்து விட்ட நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தங்கள் கொள்கை , பிரசாரங்கள், நடவடிக்கைகள், மாற்று கட்சியினருக்கு பதிலடி கொடுக்கும் நடவடிக்கை ஆகியவற்றுக்காக தகவல் தொழில் நுட்ப அணி(ஐடி விங்க்) அமைத்துள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை திமுகவின் தகவல் தொழில் நுட்ப அணி பலம்பொருந்தியதாக உள்ளது. மாவட்டம், மண்டலம், தொகுதி வாரியாக ஐடி விங்க் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிர்வாகிகள் தகவல் தொழில் நுட்பத்தில் சிறந்தவர்களாக, பெரும்பாலும் தகவல் தொழில் நுட்பம் அறிந்த ஆண், பெண் பட்டதாரிகளாக உள்ளனர்.இதன் மாநில செயலாளராக இருப்பவர் டிஆர்பி ராஜா எம்.எல்.ஏ. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வர உள்ள நிலையில், ஐ.டி. விங்க்கை மேலும் பலப்படுத்த திமுக திட்டமிட்டு உள்ளது.
எனவே தமிழகம் முழுவதும் உள்ள திமுக தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள் நேர்காணல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை தொடங்கியது. மாநில செயலாளர் டிஆர்பி ராஜா நிர்வாகிகளிடம் நேர்காணல் நடத்தினார். இன்று வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகளிடம் நேர் காணல் நடத்தினார். இதற்காக காலையிலேயே நிர்வாகிகள் பெருமளவு திரண்டு வந்திருந்தனர்.
தொடர்ந்து 6ம் தேதி வரை நேர் காணல் நடக்கிறது. அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும் அழைத்து இந்த நேர்காணலை நடத்துகிறார். இதனால் தகவல் தொழில் நுட்ப அணி நிர்வாகிகள், உறுப்பினர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.