வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையிலான பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கடந்த ஆண்டு மே மாதம் குகி, மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் வெடித்தது. 200-க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர்.
தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மணிப்பூரில் அமைதியை நிலைநாட்டக் கோரியும், டிஜிபி, பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரை நீக்க கோரியும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் 5 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மற்றும் மேற்கு இம்பால் மாவட்டங்களில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளுக்கு மட்டும் ஊரடங்கில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கு பிரச்சினை ஏற்படக்கூடும் என்பதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாணவர்கள் கவர்னர் மாளிகையை நோக்கி எந்த நேரத்திலும் பேரணி நடத்தலாம் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது. எனவே இன்று முதல் வரும் 15ம் தேதி வரை மணிப்பூரில் இணைய சேவை துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.