Skip to content
Home » திருச்சி என்ஐடியில் பேரிடர் மேலாண்மைக்கான தொழில் நுட்ப தீர்வு… சர்வதேச கருத்தரங்கு

திருச்சி என்ஐடியில் பேரிடர் மேலாண்மைக்கான தொழில் நுட்ப தீர்வு… சர்வதேச கருத்தரங்கு

திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழகத்தில்,  ‘அவசர கால சேவை மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான அறிவார்ந்த தொழில் நுட்பத் தீர்வு (ISERDM 2023)’ என்னும் தலைப்பில் சர்வதேச அளவிலான கருத்தரங்கு வரும் 9 ம் தேதி முதல் 11 வரை  நடக்கிறது. தேசிய தொழில் நுட்பக் கழகத்தின் (NIT-T) அவசர கால தொழில் நுட்ப சேவை மற்றும்  திருவனந்தபுரம் உதவி சிறப்பு மையம்  மற்றும் கணிணி வளர்ச்சி மற்றும் மேம்பாடு மையம்  இதனை ஏற்பாடு செய்துள்ளது.

கருத்தரங்கில் பேரிடர் காலங்களில் அவசர/துரித தகவல் பரிமாற்றம் மற்றும் தொழில் நுட்பம் மூலமாக நிலையான தீர்வை நோக்கி நகர்வதற்கு பேரிடர் மேலாண்மையில் சர்வதேச அளவில் சிறப்பு வாய்ந்த நாடு முழுவதிலிருந்து மக்கள் பேரிடர் காலங்களில் பேரிடர் மேலாண்மை மையத்தை தொடர்பு கொள்ள தொலைபேசி, கைபேசி, கணிணி வாயிலாகவும், மின் அஞ்சல் மற்றும் அவசர கால கருவி மற்றும் 112 தேசிய கைபேசி (Mobile) செயலி வாயிலாக தொடர்பு கொள்ள ஏதுவான பேரிடர் மேலாண்மை மையத்திற்கான மென்பொருள் வடிவமைப்பதை மையக் கருவாக கொண்டு கருத்தரங்கு நடைபெறுகிறது.

24 x 7 தொடர்பு கொள்ளவும், உடனடி நடவடிக்கை எடுக்க தேவையான சிறப்பு அம்சங்கள் கொண்டதாகவும், தகவல்களை எந்த வடிவில் (.. தொலைபேசி, மொபைல், குறுஞ்செய்தி, மின்அஞ்சல், இணையம், இணைய தொடர்பு, அவசர கால தொடர்பு பொத்தான்கள், கருவிகள்) இருந்தாலும் பெற்று உடனடியாக செயலில் இறங்கி பாதிக்கபட்டவர்களை மீட்க நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் ஏதுவான மென்பொருள் வடிவமைத்தல்.
விபத்து ஏற்பட்ட நிகழ்வு இடத்தை துல்லியமாக அறியவும், நிகழ்வு இடத்தில் உள்ள மக்களை உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தொலைபேசி அல்லது மின் அஞ்சல், மற்ற மின்னணு தொடர்பு கருவிகள் வாயிலாக உதவும் மென்பொருள் வடிவமைத்தல்.
பாதிப்பு  ஏற்பட்ட இடத்திலுள்ள மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் முதலுதவி உடனடியாக அளிப்பதற்கு மென்பொருளின் தானியங்கி தளம் வாயிலாக அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்குத் தகவல்களை அனுப்பி, ஒருங்கிணைப்பு செய்துபாதிப்பு  ஏற்பட்ட இடத்திற்கு உடனடியாக அனுப்பி வைப்பது.

செயற்கை கோள் உதவியுடன் சம்பவ இடத்தை துல்லியமாக அறிந்து அந்த இடத்திற்கு அருகிலுள்ள அவசர கால ஊர்திகளுக்கு தேவையான நிவாரண உபகரணங்கள், பொருட்களைக் கொண்டு செல்லவும் திட்டமிடல்.

பேரிடர் எண் 112னுடன் அவசர கால எண்களான 100 மற்றும் 108 ஆகியவற்றை ஒருங்கிணைத்து சம்பவ இடத்திற்கு உடனடியாக விரையச் செய்தல்.
மேலும் காவல் துறை கண்காணிப்பு இணையதள அமைப்பு, தொலை தொடர்பு சேவை அளிக்கும் அமைப்பு ஆகியவற்றுடன் ஒருங்கிணைப்பு செய்து நிகழ்வு ஏற்பட்ட இடத்திலிருப்பவர்களுடன் தொடர்பு கொள்ள ஏதுவான தகவல்களை பெற்று மொபைல் நுழைவு தள உதவியுடன் நிகழ்வு இடத்தை மிகவும் துல்லியமாக அறிதல்.

தேசத்தில் எந்த இடத்தில் பேரிடர் ஏற்பட்டாலும் உடனடியாக தகவல்களை அளிப்பதற்காக தரப்படுத்தப்பட்டதும் மற்றும் எளிய முறையில் இயக்கக் கூடிய மொபைல் செயலிகளாகவும், இணையச் செயலிகளாகவும் அனைத்து செயலிகள் தளத்திலிருந்தும் உருவாக்கம் செய்யக் கூடியதாக இருக்கும்..

கருத்தரங்கின் முக்கிய நோக்கம் பேரிடர் காலத்தில் மக்கள், உயிரினங்கள் மற்றும் உடமைகளை காப்பாற்றுவதற்கு முன்னுள்ள சவால்கள் என்னென்ன அவற்றிற்கு தொழில் நுட்ப வாயிலாக எவ்வெவ்வாறு தீர்வு காண்பது, அனைத்து தகவல் அமைப்புகளை எவ்வாறு ஒன்றிணைப்பது, மிகவும் குறுகிய நேரத்தில் மீட்பு நடவடிக்கை பணிகளை சம்பவ இடத்தில் தொடங்குவது என பல்வேறு நிலைகளை பற்றி அறிஞர்கள், வல்லுநர்கள் இடையே ஒரு கருத்துப் பரிமாற்ற களத்தை அமைப்பதே ஆகும்.இதன் வாயிலாக மேலும் பல ஆராய்ச்சியாளர்கள், தொழில் நுட்ப வல்லுநர்களுக்கு ஒரு பயிற்சி பட்டறையை அமைப்பதும் ஆகும்..

கருத்தரங்கில் 30 க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகள் செயற்கை நுண்ணறிவு. பேரிடர் சம்பவத்தை முன் கூட்டியே கணித்தல், பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரணம், இருக்கக் கூடிய வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தல், கண்காணிப்பு செயலிகள். அவசர கால தொடர்பு மற்றும் பதிலி என பல்வேறு தலைப்புகளில் வெளிப்படுகின்றன.

தலை சிறந்த எட்டு வல்லுநர்களின் பேருரைகள் மற்றும் அவர்களின் ஆராய்ச்சி பற்றிய கலந்துரையாடல்கள் இந்த கருத்தரங்கில் இடம் பெறுகின்றன.
கருத்தரங்கை  திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக இயக்குநர் முனைவர் ஜி. அகிலா முன்னிலையில், சென்னை பெருவெள்ள தடுப்பு ஆலோசனைக் குழுவின் தலைவரும், உள் துறையின் பேரிடர் மேலாண்மை குழுவின் முன்னாள் ஆலோசகருமான முனைவர்  வெ. திருப்புகழ், இஆப (ஓய்வு)  தொடங்கி வைக்கிறார். திருவனந்தபுரம் C-DAC நிறுவனத்தின் பொது இயக்குநர்  மகேஷ்  கௌரவ விருந்தினராகவும், திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் விஷ்ணு வேணுகோபால், கோயம்புத்தூர் சரக காவல் துறை கண்காணிப்பாளர் வி. பத்ரி நாராயணன்,  சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றார்கள்.

சர்வதேச அளவில் புகழ்பெற்ற கனடா நாட்டின் ஒட்டாவா நகரம் கார்லெடான் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் சங்ஹார்ங் லங், திருவனந்தபுரம் ஸ்ரீ சித்திரைத் திருநாள் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குனர் பேராசிரியர் குருபத் ராதாகிருஷ்ணன் , தஞ்சை மருத்துவக் கல்லூரி எலும்பியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர்.  எஸ் குமரவேல், அமெரிக்காவில் உள்ள டேட்டா நெட்டிக்க்ஷ் நிறுவனத்தின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரி . பாலா ஸ்ரீ ராகவனும் சிறப்புப் பேருரையாற்ற உள்ளார்கள். கருத்தரங்கை பற்றி மேலும் தகவல்களை https://iserdm2023.nitt.edu/ இணைய தள முகவரியின் மூலம் அறியலாம்.
கருத்தரங்கின் ஒரு பகுதியாக 28 மணி நேர தொடர் நிகழ்நிரலோட்டம் (Hackathon) டேட்டாநெட்டிக்க்ஷ நிறுவனம், அமெரிக்காவுடன் இணைந்து ஜனவரி 9 முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில் தற்போதைய இளங்கலை பட்ட வகுப்புகளில் படிக்கும் அனைத்துத் துறை மாணவர்களும் குழுவாக கலந்து கொள்ளலாம். ஒரு குழுவிற்கு இரண்டு மாணவர்கள் பேரிடர் மேலாண்மையில் உள்ள ஏதேனும் சவால் ஒன்றை தெரிய தெரிவு செய்து, அதற்கான தீர்வாக, செயற்கை நுண்ணறிவு, தகவல்அறிவியல் மற்றும் இணையதள பாதுகாப்பு ஆகிய எண்ணோட்டங்களில் செயலிகளை உருவாக்கலாம். புதுமையான யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட குழுக்கள் இந்தத் தொடர் நிகழ்நிரலோட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். பரிசுத் தொகை ரூ.25000/- வெற்றி பெறும் குழுக்களுக்கு அளிக்கப்படும். தொடர் நிகழ்நிரலோட்டம், திருச்சி தேசிய தொழில் நுட்பக் கழக வளாகத்தில் நேரடியாக நடத்தப்படுகிறது. போட்டியை பற்றிய மேலும் தகவல்கள் https://nit-hackathon.datanetiix.com/ இணைய தள முகவரியில் மூலம் அறியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!