திருச்சி மாவட்டம் எம்.ஆர்.பாளையம் வனவியல் விரிவாக்க மையத்தில் சா.அய்யம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, தொழிற்கல்வி வேளாண் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான 10 நாட்கள் உள்ளுரைப்பயிற்சி கடந்த மாதம் 25 ம் தேதி முதல் இம்மாதம் 6 ம் தேதி வரை தலைமை வனப் பாதுகாவலர் சதிஷ் அறிவுரையின்படியும் திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா ஆலோசனைபடியும்,வனவியல் விரிவாக்க மைய உதவி வனப்பாதுகாவலர் சரவணக்குமார் தலைமையில் நடைப்பெற்று வருகிறது..
வனச்சரக அலுவலர், கிருஷ்ணன் ரவி, மற்றும் வனவர் விக்னேஷ் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு நாற்றங்கால் செயல்முறைகளான தாய்ப்பாத்தி அமைத்தல், மண்கலவை தயார் செய்தல், மண் கலவையை பைகளில் நிரப்புதல், தாய்ப்பாத்தியில் முளைத்த விதை நாற்றுகளை பைகளுக்கு மாற்றுதல், நீர்பாய்ச்சுதல், களை எடுத்தல், தரம்பிரித்தல், பைகளை இடம்மாற்றுதல் தொடர்பான செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் விதைமரம் தேர்வு செய்தல் (Plus Tree), விதைகளை சேரகம் செய்தல், விதை முளைப்பு திறன், விதை நேர்த்தி முறை, பல்வேறு வகையான மர விதைகளை கண்டறிதல் போன்ற பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
பள்ளி மாணவர்கள் சுயமாக நாற்றங்கால் உற்பத்தி செய்து மேம்படும் வகையில் நாற்றங்கால் தொழில்நுட்பம் குறித்து சிறப்பாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் தொழிற்கல்வி ஆசிரியை (விவசாயம்) கல்பனா ,முதுகலை ஆசிரியர் (ஆங்கிலம்) ரமீலா ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களை ஒருங்கினைத்தனர்.
மேலும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த வேளான் படிப்புகள் பயிலும் அனைத்து கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு களப்பயிற்சியுடன் கூடிய வன நாற்றங்கால் உற்பத்தி குறித்து பயிற்சி அளிக்கப்படும் எனவும், உதவி வனப்பாதுகாவலர் தெரிவித்துள்ளார்கள். இதனை அந்தந்த பள்ளி நிர்வாகம் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.