18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு, துணை குடியரசுத் தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதனிடையே, இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் நரேந்திர மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டதாகக் குற்றம் சாட்டி காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் அரசியல் சாசன புத்தகத்தை கைகளில் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அரசியல் சாசனத்தைப் பாதுகாப்போம் என்றும் அரசியல் சாசனம் வாழ்க என்றும் முழக்கங்களை அவர்கள் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ், டிம்பிள் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்ள் சுதிப் பந்தோபாத்யாய, சவுகதா ராய், கல்யாண் பானர்ஜி உள்ளிட்ட ஏராளமான எம்.பி.,க்கள் கலந்து கொண்டனர்.
திரிணமூல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, “அரசியல் சாசன கோட்பாடுகள் மீறப்பட்டுள்ளதால் நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இடைக்கால சபாநாயகர் தேர்வு விஷயத்தில் மோடி அரசு அரசியல் சாசனத்தை, நாடாளுமன்ற மரபுகளை மீறிவிட்டது தெளிவான ஒரு விஷயம்” எனக் குறிப்பிட்டார்.