தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள வாலத்தூர் கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மகன் பாலகிருஷ்ணன் என்ற ரஞ்சித் பாலா (23). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு கிராமத்துக்கு அருகேயுள்ள வைரவன் தருவை குளத்தில் நண்பர்களுடன் சேர்ந்து விபரீத சாகசத்தில் ஈடுபட்டுள்ளார். குளத்தின் ஒரு ஓரத்தில் பெட்ரோலை ஊற்றி தீவைத்துள்ளனர். தீ மளமளவென எரியும் போது மேலிருந்து நெருப்புக்குள் அதாவது குளத்தில் ரஞ்சித் பாலா குதித்து சாகசம் செய்துள்ளார். இதனை வீடியோவாக பதிவு செய்து ரஞ்சித் பாலா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முருகன் மகன் சிவக்குமார் (19) மற்றும் வீரபுத்திரன் மகன் இசக்கிராஜா (19) ஆகியோர் சேர்ந்து இந்த சாகசத்தை செய்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டது தெரியவந்தது. இதைடுத்து தட்டார்மடம் போலீசார் 3 பேர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பாலகிருஷ்ணன் (எ) ரஞ்சித் பாலா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவான இசக்கிராஜாவை தேடி வருகின்றனர்.