மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரன் சனிக்கிழமையன்று சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, சரண்ராஜ் என்ற இளைஞருடன் ஏற்பட்ட பிரச்னையில், அவரை சாலையில் உதைத்துத் தள்ளி தாக்கியதாகவும், சாதியை குறிப்பிடும் வகையில் விமர்சித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து, சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.
பழைய செய்தி:
மயிலாடுதுறையில் பட்டியலின இளைஞரை தாக்கிய மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மயிலாடுதுறை காவல் நிலையத்தில் சனிக்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளராக உள்ளவர் குணசேகரன். இவர் மயிலாடுதுறை கூறைநாடு அருணா பெட்ரோல் பங்க் பகுதியில் சனிக்கிழமை மதியம் சீருடை அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற சென்ற செம்மங்குடி, நந்தனார் தெருவைச் சேர்ந்த சரண்ராஜ்(31) என்ற இளைஞர் தனக்கு செல்போனில் அழைப்பு வந்ததால், வாகனத்தை இடதுபுறமாக ஓரங்கட்டியுள்ளார். இதில்;, பின்னால் வந்த காவல் ஆய்வாளர் குணசேகரன் தடுமாற்றம் அடைந்ததால் ஆத்திரமடைந்து சரண்ராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனை சரண்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இதனால், மேலும் ஆத்திரமடைந்த காவல் ஆய்வாளர் குணசேகரன், சரண்ராஜை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வாகனத்தில் விரட்டிச்சென்று, மகாதானத்தெருவில் மடக்கிப்பிடித்து, அவரை வாகனத்துடன் எட்டி உதைத்ததுடன், கடுமையாக தாக்கியுள்ளார். மேலும், ஜாதியை குறிப்பிட்டு விமர்சித்து, தகாத வார்த்தைகளால் திட்டினாராம். இதனைத் தட்டிக்கேட்ட திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் என்பவரையும் ஆய்வாளர் குணசேகரன் திட்டினாராம்.
தொடர்ந்து, சரண்ராஜை மயிலாடுதுறை காவல் நிலைய போலீஸாரிடம்; ஒப்படைத்த ஆய்வாளர் குணசேகரன், சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். இதனிடையே, தகவலறிந்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிவ.மோகன்குமார் காவல் நிலையம் வந்து, சரண்ராஜ் மீது தவறு இல்லை என்பதை போலீஸாரிடம் விளக்கி, சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக காவல் நிலையத்தில் அமர வைக்கப்பட்டிந்த சரண்ராஜை விடுவித்து அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆய்வாளர் குணசேகரன்மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட செயலாளர் தெ.மகேஷ் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
இப்பிரச்னையில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் குணசேகரன் ஏற்கனவே கடந்த ஆண்டு ஆகஸ்ட் 26-ஆம் தேதி தலித் இளைஞர் ஒருவரைத் தாக்கி, அதனைக் கண்டித்து விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து, ஆய்வாளர் குணசேகரன் கூறுகையில், இச்சம்பவத்தில் தொடர்புடைய சரண்ராஜ், தான் ஒரு பிரபல ரௌடியின் தம்பி என்று கூறி மிரட்டியதாகவும், தான் அவரை திட்டவோ, தாக்கவோ இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.