அரியலூர் நகரில் உள்ள கிருஷ்ணன் கோவிலில், சீரமைப்பு பணிகளின் பொழுது, 285 ஆண்டுகளுக்கு முன்பு ஜமீன்தார் காலத்தில் நிலதானம் வழங்கிய கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தி உள்ளது.
அரியலூர் மாவட்டம், அரியலூர் நகரில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட, பிரசித்தி பெற்ற கோதண்ட ராமசுவாமி திருக்கோயில் உள்ளது. தசாவதார சிற்பங்கள் கோவிலின் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள சிறப்புமிக்க இக்கோவிலில், நடைபெற்ற தேரோட்டம் நிறுத்தப்பட்டு, 82 ஆண்டுகளுக்கு பிறகு தற்பொழுது புதிய தேர் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய தேர் நிலை நிறுத்தும் கிருஷ்ணர் கோவிலில், சீரமைப்பு பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிகளின் போது கோவிலின் உள்ள மண்டபத்தில், சுமார் நான்கடி உயரம்
உள்ள, மூன்று புறமும் தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள பலகை கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. இத்தகவல் அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள, வரலாற்று துறை தலைவர் ரவிக்கு அறிவிக்கப்பட்டதன் பேரில், அவர் இன்று கல்வெட்டை ஆராய்ச்சி மேற்கொண்டார். நான்கடி உயரமுள்ள கல்வெட்டில், மூன்று புறமும் தமிழ் எழுத்துக்களால் நிலம் தானம் வழங்கியதற்கான குறிப்புகள் பொறிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கல்வெட்டு பெருமாள் கோவில் மற்றும் கிருஷ்ணன் கோவில் ஆகியவற்றிற்கு நில தானம் வழங்கியதைக் குறிக்கும் வகையில் பெருமாளின் அவதாரங்களில் ஒன்றான, வாமன அவதார சிற்பமும் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது.
கல்வெட்டை ஆராய்ச்சி செய்த வரலாற்று துறை தலைவர் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், இக்கல்வெட்டு சுமார் 1739 ஆம் ஆண்டு அரியலூர் ஜமீன்தார் விஜய ஒப்பில்லாத மழவராயரால் பொறிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் பெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில் ஆகியவற்றிற்கு நிலதானம் வழங்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன. பலகை கல்வெட்டில் இடம்பெற்றுள்ள தகவல்களை சேகரித்து வருகிறோம். விரைவில் படிமங்கள் எடுக்கப்பட்டு, கல்வெட்டின் முழு வாசகமும் வெளியிடப்படும் என்று கூறியுள்ளார். கிருஷ்ணன்கோவில் சீரமைப்பின் போது சுமார் 285 ஆண்டுகளுக்கு முன்பு, ஜமீன்தார் காலத்தில் நில தானம் வழங்கிய கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது, ஆன்மீக பக்தர்களிடையே பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.