இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸின் தலைவரான சாம் பிட்ரோடா, டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “அமெரிக்காவில் பரம்பரை சொத்துக்கு வரி உள்ளது. ஒருவரிடம் 100 மில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்து இருந்தால், அவர் இறக்கும்போது அவர் 45% மட்டுமே தனது வாரிசுகளுக்கு மாற்ற முடியும். 55 சதவீதம் அரசாங்கத்தால் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஒரு சுவாரஸ்யமான சட்டம். நீங்கள் ஈட்டும் செல்வத்தை பொதுமக்களுக்காக விட்டுவிட வேண்டும். அனைத்தையும் அல்ல. உங்கள் செல்வத்தில் பாதியை. இது எனக்கு நியாயமாகத் தெரிகிறது. இந்தியாவில் இதுபோன்ற சட்டம் இல்லை. 10 பில்லியன் டாலர் சொத்துக்களைக் கொண்டுள்ள ஒருவர் இறந்துவிட்டால், அவருடைய பிள்ளைகளுக்கு 10 பில்லியன் டாலரும் கிடைத்துவிடும். பொதுமக்களுக்கு எதுவும் கிடைக்காது. எனவே, இதுபோன்ற விஷயங்கள் குறித்து மக்கள் விவாதிக்க வேண்டும். விவாதத்தின் முடிவில் என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. இதனை ஒரு புதிய கொள்கையாக, புதிய திட்டமாக பார்க்கிறோம். இதில் அடங்கியிருப்பது, மக்களின் நலன்மட்டுமே; பெரும் பணக்காரர்களின் நலன் அல்ல” என்று கூறியிருந்தார். இந்த நிலையில் பரம்பரை சொத்து வரி விதிக்கும் எந்தத் திட்டமும் காங்கிரஸிடம் இல்லை. அதுபோன்ற சிந்தனையும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெரிவிக்க விரும்புகிறேன்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். சாம் பிட்ரோடாவின் இந்தக் கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்தோடு பிரதமர் மோடி முதல் அமித் ஷா வரையிலான பாஜக தலைவர்கள், இந்தக் கருத்தை தேர்தல் பிரச்சார அஸ்திரமாக பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.