திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள ஸ்ரீமதி இந்திராகாந்தி பெண்கள் கல்லூரியில் நேற்று இரவு 25க்கும் மேற்பட்ட மாணவிகள் வாந்தி எடுத்து மயங்கினர். உடனடியாக அவர்கள் அருகில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு குளுக்கோஸ் செலுத்தப்பட்டுதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலையில் மேலும் 20 மாணவிகளுக்கு அதே போல வாந்தி, பேதி மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதுபற்றிய தகவல் அறிந்த திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ரமேஷ்பாபு மற்றும் குழுவினர் அங்கு சென்று மாணவிகளிடம் என்ன சாப்பிட்டார்கள், ஏன் வாந்தி வந்தது என விசாரித்தனர். பின்னர் உணவு சமைக்கப்பட்ட இடத்தை ஆய்வு செய்து அதனை சீல்வைத்தனர். மாணவிகள் சாப்பிட்ட உணவின் மாதிரியை பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர் கல்லூரிக்கு திரண்டு வந்தனர். இதனால் கல்லூரியில் பரபரப்பு ஏற்பட்டது.