சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க இருக்கிறது. இந்த தருணத்தை உலகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி, அதன்பின் ரோவர் வெற்றிகரமாக வெளியேறி செயல்பட்டால், இந்தியாவின் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படும். நிலவின் தென்துருவத்திற்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பிய முதல் நாடு இந்தியா என வரலாற்றில் இடம் பிடிக்கும்.
இந்த நிலையில் இன்று நிலவில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்க இந்தியா முழுவதும் கோவில்களில் வழிபாடு மேற்கொள்ளப்பட்டது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் உள்ள ஸ்ரீ மஹாகாலேஷ்வர் கோவிலில் பாஸ்மா ஆரத்தி சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. உத்தர பிரதேசத்தில் பா.ஜனதா தலைவர் மொஹ்சின் ரசா, ஹஜ்ரத் ஸா மீனா ஷா தர்காவில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார். அமெரிக்காவின் நியூஜெர்சி மோன்ரோயில் உள்ள ஓம் ஸ்ரீ சாய் பாலாஜி கோவில் மற்றும் கலாச்சார மையத்தில் இந்தியர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இதுபோல இங்கிலாந்து , கனடா, சிங்கப்பூர் பிரான்ஸ் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்பட பல்வேறு நாடுகளிலும் வசிக்கும் இந்தியர்கள் ஆங்காங்கே சிறப்பு வழிபாடுகள் நடத்தினர். அஜ்மீர் தர்காவிலும் இன்று சிறப்பு தொழுகை செய்யப்பட்டது.